Tuesday, September 22, 2009

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது (2)

ரொம்ப அசதியா இருக்கீங்களா அப்போ வாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்.... 
 

கால் வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயித்தில ஆபரேஷன் செய்திருக்கிறார் ...ஏன்னு நீங்க கேக்கலையா...?
ஏன் கேக்கணும் ...அந்த டாக்டர பத்தி தெரிஞ்சுதானே வயித்து வலிக்கு பதிலா கால் வலின்னு சொல்லி சேர்ந்தேன்....


என் தாத்தாவுக்கு நூறு வயசாகுது ... ஆனா இதுவரைக்கும் டாக்டர்கிட்ட போனதே கிடையாது..
உன் தாத்தாவுக்கு நூறு வயசுன்னு சொல்லும் போதே நெனச்சேன்...


ஐயோ  டாக்டர் என்ன இது சாவுக்கு முன் சாவுக்கு பின் அப்படின்னு எழுதியிருக்கு..?
அட ஏன் பதர்றீங்க ... சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அதத்தான் அப்படி சுருக்கமா  எழுதியிருக்கேன்..

ஊசி போட்ட பிறகும்  எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க..?
இல்ல.. உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு பாக்கணும் அதான்...

நீங்க இங்க கிளீனிக் ஆரம்பிச்சதிலிருந்து உங்கள தவிர இதுவரைக்கும் நான் வேற யார்கிட்டயும் பாக்கரதில்லே...
நானும் அப்படித்தான்.. உங்கள தவிர வேற யாருக்கும் இதுவரைக்கும் ட்ரீட்மென்ட் செஞ்சதே இல்ல..

இந்த டாக்டர் ஒரு அரசியல்வாதின்னு எப்படி சொல்றீங்க?
ஒட்டு எண்ணிக்கை குறைஞ்சுடும்னு தேர்தல் வரைக்கும் எந்த ஆபரேஷனும் செய்ய மாட்டேன்னு சொல்றாரே...

டாக்டர் மாப்பிள்ளையா பார்த்தது தப்பா போய்டுச்சு ..
ஏன் என்னாச்சு?
பெண் பாக்க வரீங்களான்னு  கேட்டதுக்கு  48மணி நேரம் போனதுக்கு அப்புறம் தான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிட்டாரு .....

ஆபரேஷன் பண்ணும் போது பிழைச்ச பேஷன்ட் தையல் பிரிக்கும் போது இறந்துட்டாரு..
அதெப்படி?
டாக்டர் ஏதோ நெனப்புல போஸ்ட் மாட்டம் பண்ணிட்டாரு..


அந்த டாக்டர் ரொம்ப மோசம்..
ஏன் அப்படி சொல்றீங்க?
பேஷன்ட்ட பாத்து நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்கறாரு ...
இதிலென்ன தப்பு?
ஆச்சரியமா கேக்கிறாரே?

ரேஷன் கடையில அரிசி பருப்பு எல்லாமே போடறாங்க..
உளுந்து போடறாங்களா?
உளுந்து எல்லாம் போடல உக்காந்துதான் போடறாங்க..


மீண்டும் சந்திப்போமா  ......

Thursday, September 10, 2009

திக் திக் திக்......

வானத்தில் நிலவு அன்று விடுமுறை எடுத்து இருந்தது......
நட்சத்திரங்களும் கூட ஆப்சென்ட் ...... எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது... அவ்வப்போது மின்னல் மட்டும் தலையை காட்டி விட்டு சென்றது...
அடித்த சூறைக் காற்றில் சருகுகளும் பேப்பர்களும் தலை தெறிக்க ஓடின ...
காரின் கண்ணாடிகளை ஏற்றி விட்டுக் கொண்டேன்  ... ஏக்சிலிரேட்டரில் காலை வைத்து  மிதித்தேன்  ... வண்டி வேகம் எடுத்து மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து சென்ற   மண் சாலையில் செல்ல ஆரம்பித்தது ... சிறிது தூரம் சென்றதும் வண்டி வித விதமான சத்தம் கொடுத்து விட்டு இனி நகர மாட்டேன் என்று நின்று விட்டது..அடச்சே..... சரியான நேரம் பாத்து கார் கால வாருதே... காரை லாக் செய்து விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன் ...
மழை துளி சில்லென்று முகத்தில் விழுந்தது...
அடக் கடவுளே இந்த நேரத்தில் வீட்ல இருந்து வெளிய வந்தது தப்போ ?
கையில் கட்டி இருந்த வாட்சை திருப்பி மணியை பார்த்தேன் ... அது ரேடியம் உபயத்தில் 10.50 என்று காட்டியது...
வேகமாக ஓடினால் கூட  போய் சேர இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுமே...
உதவிக்கு யாரையாவது கூப்பிட முடியுமான்னு கொஞ்ச தூரம் போய் பாக்கலாம்...
மழை வேகம் எடுத்தது... முற்றிலுமாக என்னை நனைத்தது....
ரெண்டு நாள் புயல் மழை பெய்யும்னு நியூஸ்ல வேற  சொன்னாங்க... இன்னைக்கே அப்படி அங்கே போய் ஆகணுமா ?   மனதுக்குள் நினைத்து கொண்டேன் ..
அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் காற்று பின்னால் தள்ளியது...
முயற்சியை கை விடாமல் நடக்க ஆரம்பித்தேன்..
அவ்வப்போது அடித்த மின்னல் வெளிச்சத்தில் மட்டுமே பாதை தெரிந்தது... காற்றில் மரங்கள் அசைவது ஒருவித கிலியை ஏற்படுத்தியது....
எப்படியாவது போயே தீர வேண்டும் மனதுக்குள் எண்ணிக் கொண்டே சென்றேன்..
யாரது..?
திடீரென்று பின்னால் இருந்து கரகரத்து போன குரல் கேட்க திக்கித்து போனேன்...
மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பினேன்..
கருப்பு நிறத்தில் ஒரு சால்வையை போர்த்திக் கொண்டு கையில் டார்ச்சுடன் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் நின்றிருந்தார்..
என் முகத்தில் டார்ச் லைட்டின் ஒளி வட்டத்தை செலுத்திக் கொண்டே கேட்டார்..
யார் நீங்க? இந்த நேரத்தில தனியா அதுவும் இந்த வழியா போறீங்க?
அய்யா ! இந்த வழியா எதாவது ஒர்க் ஷாப் இருக்குங்களா ?
இந்த வழியா வீடுகளே கிடையாது.. அப்பறம் எப்படி ஒர்க் ஷாப் இருக்க போகுது...?
நான் என் அத்தை வீட்டுக்கு கிளம்பி போயிட்டிருந்தேன்... வர வழியில மழை வேகமா வர ஆரம்பிச்சிடிச்சி .. சரி சீக்ரமா போலாம்னு இந்த குறுக்கு பாதையில வந்தேன் .. என் நேரம் கார் வேற பிரேக் டவுன் ஆயிடுச்சு..
இதப் பாருங்க உங்க நல்லதுக்காகத்தான்  சொல்றேன்...வந்த வழியாவே திரும்பி போய்டுங்க..மேற்க்கொண்டு இந்த வழியா தொடர்ந்து போகாதீங்க...
 ஏன் அப்படி சொல்றீங்க?
இந்த வழியா போனா எந்த வீடுகளும் கிடையாது.. மிஞ்சி மிஞ்சிப் போனா மெயின் ரோடுகிட்ட போனாதான் ஓரிரு வீடுகள் இருக்கும்..மெயின் ரோடுகிட்ட போகனும்னாலே நீங்க இன்னும் நாலு மணி நேரம் நடக்கணும்..அதுவும் இந்த வழியா போனா அப்பறம் உங்க உயிருக்கு நான் உத்தரவாதம் கிடையாது..
ஐ....ஐ...ஐயா ...ஏன் அப்படி சொல்றீங்க ?
இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு சுடுகாடு வரும்.. அங்க பகல் நேரத்திலேயே ஆவிகள் நடமாடறதா சொல்றாங்க ....இதுவரைக்கும் பன்னிரண்டு பேரு ஆவி அடிச்சு இறந்து போயிருக்காங்க .... ஆனா நீங்க இந்த அகால நேரத்தில தனியா போறேன்னு சொல்றீங்க.. வந்த வழியாவே திரும்பி போயிடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்...
என் உடல் முழுவதும் வெள்ளமாய் வியர்வை...இதயம் ஹை ஸ்பீடில் துடித்து கொண்டிருந்தது...
பேசாமல் திரும்பி போய் விடலாமா ? போனால் மட்டும் வீட்டிற்க்கு எப்படி போவது..?எத்தனை தூரம் நடப்பது...பேசாமல் அந்த பெரியவரிடமே எதாவது உதவி கேட்கலாம் என்று வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தேன்...
மழையின் வேகம் சற்று குறைந்திருந்தது..
கிட்டத்தட்ட ஓடுவதைப் போல் நடந்தேன்.. வழி முழுவதும் சேரும் சகதியும் காலை இடறி விட்டது..
கொஞ்ச தூரம் வந்திருப்பேன்... அந்த பெரியவரைக் காணவில்லை...என்ன அதிசயம் இவ்வளவு வேகத்தில் சென்று விட்டாரா.? அதெப்படி நான் இவ்வளவு வேகமாக ஓடி வந்தே இவ்வளவு தூரம் தான் வந்திருக்கிறேன்,,, இந்த தள்ளாத வயதில் அந்த பெரியவர் எப்படி போயிருக்க முடியும்...
மனதிற்குள் பயம் முளை விட்டது....
அங்கேயே நின்று திரும்பி பார்த்தேன்...பெரிய பெரிய மரங்கள் கிளைகளை கை கால்களை  போல் ஆட்டிக் கொண்டிருந்தன.. 
இனி இவ்விடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்க கூடாது பேசாமல் காருக்குள்ளேயே போய் உக்கார்ந்து கொள்ளலாம் என்று வேகமாக காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..
கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தேன்.. உறைந்து போனேன்... காரின் ஹெட் லைட்டுகள் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தன..
பயத்தில் என் இருதயம் துடிக்கும் சத்தம் எனக்கே கேட்டது...கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.. மழை சுத்தமாக நின்றிருந்தது...
அதெப்படி நான் வரும் போது விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்டு காரை லாக் செய்து விட்டுத்தானே வந்தேன்..
பி..பி..பின்.. எப்..எப்படி..?
காரின் அருகில் சென்று பார்க்கலாமா?
மனதிற்குள் நினைத்தாலும் பயத்தால் கால்கள் நகர மறுத்தன..
எச்சிலை விழுங்கிக் கொண்டே மெல்ல மெல்ல முன்னே சென்றேன்... காரின் பானட்டில் கை வைத்ததும் விளக்குகள் அணைந்து விட்டது...
காரின் கதவிடம் வந்தேன்.. அந்த மழைக் குளிரிலும் என் உடல் தெப்பமாய் வியர்த்திருந்தது..
மெல்ல கார் கைப்பிடியை திருகினேன்.. ப்ளக் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது...
லாக் செய்த கதவுகள் எப்படி திறக்கும்? ஒரு வேலை சரியாக லாக் செய்யாமல் விட்டிருப்பேனா ?
மெல்லக் கதவை திறந்தேன்... உள்ளே விளக்கு எரிந்தது... அங்கே...அங்கே... ஒரு உருவம் காரின் பின் சீட்டில் உட்க்கார்ந்திருந்தது ....
இதயம் துடிக்க மறுத்தது.. 
முகம் முழுவதும் அழுகிய நிலையில் அந்த உருவம்  என்னை பார்த்து சிரித்தது...
விழுந்தடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்தேன்.. எவ்வளவு தூரம் ஓடி வந்தேன்... தெரியவில்லை..
அந்த குறுக்கு பாதையில்  இருந்து விலகி செடி கொடிகளுக்கிடையில் ஓடி வந்திருந்தேன்...
தூரத்தில் சின்னதாய் ஒரு வெளிச்சம் தெரிந்தது... எதாவது வீடாக இருந்தால் உதவி கேட்கலாம் என்று வெளிச்சத்தை நோக்கி ஓடினேன்..
கிட்ட வர வரத்தான் அது ஒரு பெரிய பங்களா என்று தெரிந்தது... இருட்டில் பெரியதாக பார்பதற்க்கே பயமாக இருந்தது... அதன் கேட்டில் தான் அந்த சின்ன சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது... 
பங்களாவின் சுவரெங்கும் செடி கொடிகள் படர்ந்திருந்தது...
உள்ளே போகலாமா வேண்டாமா ?
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  கேட்டைத் திறந்தேன்... அந்த கேட் ஒரு நாராசமான ஒலியை எழுப்பியது..  உள்ளே நுழைந்தேன்.. 
பங்களாவை சுற்றிலும் செடிகள் ஆளுயரத்திற்கு வளர்ந்து இருந்தது..  மெல்ல மெல்ல நடந்தேன்... இரண்டடிகள் முன்னே சென்றதும் ஏதோ ஒன்று வெள்ளையாய் நீளமாய் தெரிந்தது..என்ன அது ? அது ஒரு கல்லறை .. அங்கங்கே இடிந்து சிதிலமாய் காட்சியளித்தது... என்  உள்மனது என்னை எச்சரித்தது.. வேண்டம் இனி ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்காதே..
ஆனால் இந்த அடை மழையிலும் இங்கே விளக்கு எரிகிறது என்றால் இங்கே ஆள் இல்லாமலா இருப்பார்கள்.. இறுதியாக ஒரு முறை உள்ளே சென்று பார்த்து விடுவது என்று முடிவெடுத்து உள்ளே சென்றேன்.. 
பங்களாவின் கதவுகள் திறந்துதான் இருந்தது.. குரல் கொடுத்தேன்.. 
உள்ளே உள்ளே யாரவது இருக்கீங்களா ?
ஒரே நிசப்தம்...
மீண்டும் குரல் கொடுத்தேன்..
அதே  நிசப்தம்...
ஆனால் மாடியில் எதோ சத்தம் கேட்க  படிகள் ஏறி மாடிக்கு சென்றேன்... ஐந்தாறு அறைகள் நீளமாக இருந்தன..
பங்களா முழுவதும் வெளிச்சம் இன்றி இருளில் இருந்தது.. இருட்டிலேயே இருந்ததால் கண்கள் இருட்டுக்கு பழகி இருந்தது..அந்தக் கடைசி அறையில் இருந்து எதோ நகர்த்தும் சத்தம் கேட்டது.. அறைக் கதவின் வெளியே நின்று  குரல் கொடுத்தேன் உள்ளே யாராவது இருக்கீங்களா?
சத்தம் நின்று விட்டது...
கதவை திறந்தேன் அறை எந்த பொருள்களும் இன்றி வெறுமையாக இருந்தது.. ஜன்னல் அருகே சென்றேன் ... எல்லா இடமும் வெறுமை.. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது..
வேண்டாம் இங்கிருந்து சென்று விடலாம் என்று திரும்ப முயற்ச்சித்த போது என் முதுகுக்கு பின்னல் என் கழுத்தருகே யாரோ கோவமாய் மூச்சு விடும் சத்தம்....
என் கை கால்கள் உதற ஆரம்பித்தன.. நரம்பு மண்டலங்கள் வெடித்து சிதறி விடும் போல இருந்தது... மெல்ல திரும்பினேன்... அவ்வளவுதான்..
கண் விழித்து பார்த்த போது நான் என் அறையில் என் படுக்கையில் இருந்தேன்.. அப்போது நான் கண்டது எல்லாம் கனவா.....
 

Monday, September 7, 2009

ரெண்டு ரூபா பஸ் டிக்கட்ட ஒன்பது ரூபாய்க்கு வாங்கின கோமாளி

அது யாருன்னு கேக்கறீங்களா .. நான்தாங்க....

நடந்தது என்னனு கேளுங்க .... ஒரு வேலையா பஸ் ஸ்டாண்ட் வரையும் போக வேண்டி  இருந்ததுங்க ....

சரின்னு பஸ் ஏறினேன் ....முதல் படியில தான் கால வெச்சேன் அதுக்குள்ளே பஸ் எடுத்துட்டாங்க ... டிரைவருக்கு என்ன அவசரமோ தெரியல..
எதோ முதல் சீட்ல உக்காந்திருந்த அம்மா கை கொடுத்து தூக்கி விட்டாங்க..... 
எப்படியாவது எதாவது ஒரு கம்பிய புடிச்சு நின்னு பேலன்ஸ் பண்ணிக்கலாம்னு பாத்தா டிரைவர் ரேசுல போற மாதிரி போயிட்டு இருந்தாரு....... விட்டா டிரைவர் மடியில போய் உக்காந்துருப்பேன்..... நல்ல வேளை ஒரு கம்பிய புடிச்சு நின்னுட்டேன்... 
அதுக்குள்ள கண்டக்டரும் வந்து டிக்கெட் டிக்கேட்னு கிட்ட வந்துட்டாரு...

ஒரு கைல கம்பிய புடிச்சுக்கிட்டு இன்னொரு கையாலயும் வாயாலையும் பர்ஸ திறந்து பாத்தேன்.....
இரண்டு நூறு ருபாய் நோட்டும் ஒரு இருபது ருபாய் நோட்டும் இருந்தது... பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போறதுக்கு சார்ஜ் ரெண்டு ரூபா.. 
ஆனா என்கிட்டே ரெண்டு ரூபா சில்லரையா இல்லை....  ஒரே ஒரு ஐந்து ருபாய் காயின் மட்டுமே இருந்தது... அதை எடுத்துக் கொடுத்தேன்..
சில்லரை இல்லையானு கேட்டார்... இல்லன்னா என்றேன்.... காசை வாங்கிகிட்டு டிக்கெட்டை கொடுத்தார்...

அவருக்கு என்ன கோவமோ தெரியல.. எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்..
என்னிடம் டிக்கெட்டை கையில் திணித்து கொண்டே அருகில் இருந்தவரை பார்த்து நீங்க எல்லாம் எதுக்கையா சில்லரை இல்லாம பஸ்சுல வரீங்க... கழுத்தருக்கருக்கே வருவீங்களா என்று திட்டிக் கொண்டிருந்தார்..

எனக்கு டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி சில்லரையை கொடுக்காமல் அவர் பாட்டுக்கு பின்னாடி சென்று விட்டார்..

சரி அவரிடம் சில்லரை இல்லாமல் இருக்கும் திரும்பி வரும் போது தருவார் என்று எனக்கு நானே குருட்டு சமாதானம் சொல்லிக் கொண்டேன்...

அதற்கு பின் இரண்டு மூன்று முறை முன்னே வந்தார் அடுத்தடுத்த நிறுத்தத்தில் ஏறியவருக்கெல்லாம் டிக்கெட் கொடுத்து விட்டு சென்றார்..

அண்ணா மீதி சில்லரை என்றேன்.. அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் சென்று விட்டார்..
நான்கைந்து  முறை அவரிடம் கேட்டு விட்டேன் அதை அவர் காதில் போட்டு கொண்டதாகவே தெரியவில்லை....
பேருந்திற்குள்ளும் கூட்டம் அதிகமாயிற்று ..... மிக்ஸிக்குள் அரைக்க போட்ட தேங்காய் மாதிரி தலை சுற்றி விட்டது..  பிழிந்தெடுத்து விட்டார்கள்..

அண்ணா மீதி சில்லரை .......என்று இழுத்தேன் ...
எல்லோரும் என்னையே பார்ப்பதாக எனக்கு தோன்றியது... ச்சை.. ஒரு மூன்று ரூபாவுக்கு வேண்டி நம்ம மானம் போகணுமா என்று நினைத்து பஸ் ஸ்டாண்டிற்கு  சென்ற பிறகு எல்லாரும் இறங்கியவுடன் கண்டக்டரிடம் தனியாக கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்..

ஸ்டாண்டும் வந்தது.. எல்லாரும் இறங்கிய பின் நான் கடைசியாக இறங்கினேன் ...

எனக்கு முன்னாலே இன்னொரு பெண் அந்த கண்டக்டரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்..

நானும் என் பங்குக்கு சேர்ந்து கொண்டேன்.. அண்ணா எனக்கு நீங்க சில்லரை தரணும்.. அவர் என்னை பார்த்து முறைத்தார்... 
அந்த இடத்தில் கொஞ்சம் சத்தம் அதிகமாகவே இரண்டு மூன்று பேர் எங்களை சுற்றி  கூடி விட்டனர் ... எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது ... என்னடா இது பேசாமல் மீதியை வாங்காமல் போய் விடலாமா என்று திரும்பிய போது என் தோழி வந்தாள்....
இரண்டு ருபாய் சில்லரையாய் இல்லாததால் தானே இந்த பிரச்சனை .... பேசாமல் இரண்டு ரூபாயை கொடுத்து விட்டு நான் கொடுத்த அந்த ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து

அவளிடம் அவசரமாக ஒரு ரெண்டு ருபாய் இருந்தா தா என்று வாங்கி அதை அந்த கண்டக்டரிடம் கொடுத்து விட்டு என்னுடைய ஐந்து ரூபாயை கேட்டேன்...

அந்த இரண்டு ரூபாயை சண்டை போட்ட பெண்மணியிடம் கொடுத்து விட்டு இந்தாம்மா உன் கணக்கு சரியாய் போயிடுச்சா என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்..

நான் அவரிடம் கேட்டேன் ....
அண்ணா நீங்க எனக்கு சில்லரை தரணும் ....
எவ்வளவு?...
ஐந்து ருபாய்..

எதுக்கு...?

நான் உங்ககிட்ட ஏழு ருபாய் தந்தேன் நீங்க எனக்கு ஐந்து ருபாய் மீதம் தரணும்...

அதற்குள் அவரை சுற்றி இரண்டு மூன்று கண்டக்டர்கள் சூழ்ந்து கொண்டார்கள்..

எத்தன ரூபா டிக்கெட் வாங்கினே ?

இரண்டு ரூபா டிக்கெட்..

அதுக்கு எதுக்கு ஏழு ருபாய் கொடுத்தே?

கரகாட்டக்காரன் படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் பழக் காமெடியை போல் ஆகி விட்டது என் நிலைமை .....
நடந்ததை மறுபடியும் விளக்கினேன்... அவர் என்னிடம் ஐந்து ருபாய் வாங்கவே இல்லை என்று சாதித்தார்...

எனக்கு சாதகமா பதில் சொல்ல என்னுடன் பஸ்சில் இருந்தவர்கள் யாரும் இல்லை ... நான் அவரிடம் சொன்னேன்...

 அண்ணா நான் எதுக்குன்னா உங்கள ஏமாத்தனும்... பாருங்க  என்கிட்டே எத்தன ரூபா இருக்குன்னு என்று என் பர்சை திறந்து காண்பித்தேன் ...

அவரும் அவர் பங்குக்கு அவர் கண்டக்டர் பர்சை திறந்து காண்பித்து  என்னிடமும் இத்தனை சில்லரை இருக்கும் போது நான் மட்டும் உன்னை ஏன் ஏமாத்த  போறேன் என்று வாதாடினார்..

அவருக்கு சப்போர்ட்டாக மத்த கண்டக்டர்களும் சேர்ந்து கொண்டனர்.. அவர்கள் குரல் ஓங்கி நிற்கவே நான் இதற்க்கு மேல் சத்தம் போட வேண்டம் என்று ஒதுங்கி வந்து விட்டேன்...
என்னை சுற்றி அனைவரும் ஆண்கள்... அவர்களோடு சண்டை போடவும் உண்மையாக  கொஞ்சம் பயமாகவும்  இருந்தது..  
என் தோழியோடு வீடு வந்து சேர்ந்தேன்...
கடையில் சில்லரையை மாற்றி என் தோழியிடம் வாங்கிய இரண்டு ரூபாயை கொடுத்து விட்டேன்.. அவள் வேண்டாம் என்றுதான் சொன்னாள்... 
இரண்டு ருபாய் என்றாலும் அதற்கும் மதிப்பு உண்டுதானே  ... அதற்காகத்தானே  அந்த கண்டக்டர் என்னை ஏமாற்றினார்...




Wednesday, August 26, 2009

சிரிப்பு வருது.. சிரிப்பு வருது... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

ரொம்ப டென்சனா இருக்கீங்களா .... வாங்க கொஞ்சம் சிரிப்போம் ...டென்சன குறைப்போம் .........


பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....
டாக்டர்:  சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?

பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.

பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்....

டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன் .
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..

டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....


பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க...

இனி வீட்ல நடக்குற ஜோக்குங்கள பாருங்கோ

நண்பர் : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?
கணவன் : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..

 
கணவன் : இன்னையில இருந்து என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..
நண்பர் :ஏன் ?
கணவன் : நேத்துதான் என் பொண்டாட்டி மண்டைய போட்டா ...

கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு ..
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் ...

நண்பர் : உங்க மனைவி கெணத்துல விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன் காப்பாத்தல ?
கணவன் : நீங்க உணர்ச்சி வசப் படக்கூடதுனு டாக்டர் சொல்லியிருக்கார் ..

தோழி ; உன் புருஷன் தொவைக்கும் போது ஏன் நைட்டி போட்டுக்கராரு?
மனைவி : தூரத்தில இருந்து பாக்கும் போது என்ன மாதிரி தெரியரதுக்காம்......


என்ன சிரிச்சீங்களா டென்ஷன் கொறஞ்சுதா .......இனி நாளைக்கும் கொஞ்சம் சிரிப்போம் ...
நாளை சந்திப்போமா நேயர்களே ......

Monday, August 24, 2009

நன்மை செய்தால் நன்மை உண்டாகும்

"என்னங்க வெளிய கெளம்பிட்டு இருக்கீங்களா "
"ஆமா மங்களம் நம்ம நடராஜன பாத்துட்டு வரலாமுன்னு கெளம்பறேன்"
"சரிங்க, அப்ப கடைத் தெரு வழியாத்தானே போவீங்க"
"ஆமா மங்களம் எதாவது வாங்கிட்டு வரணுமா"
"ஆமாங்க மாசக் கடைசி வேற , எல்லா பொருளும் தீர்ந்துடுச்சு, எதோ இருந்தத வெச்சு மதிய பொழுதுக்கும் சமச்சுட்டேன்... இனி அரிசி வாங்கிட்டு வந்தாதான் இராப்பொழுதுக்கு
எதாவது செய்ய முடியும்.."
"சரி மங்களம் வாங்கிட்டு வரேன் கெளம்பட்டுமா"
"சரிங்க" என்றவள் திடீரென வாசலுக்கு வெளியே பார்த்து சத்தமிட்டாள்.
"டேய் .. நந்து ஏண்டா அந்த மாட்டை பாவம் இப்படி அடிச்சு இழுத்துட்டு போறே"
"நீ சும்மா இருக்கா ....இதுகளையெல்லாம் இப்படி வெச்சுகிட்டாதான் சொன்னபடி கேட்கும்"
என்று கூறிவிட்டு அடுத்த பேச்சுக்கு காத்திராமல் ஹோய் ஹோய் என்று சத்தமிட்டு கொண்டே ஆடுகளையும் மாடுகளையும் வீட்டிற்கு விரட்டி சென்றான்...

அவனுடைய அந்த அதட்டல் குரலிலேயே அவைகள் தலைதெறிக்க ஓடின...
பாவம் இரண்டு கால்களும் சேர்த்து கட்டப்பட்டு நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் விழுந்து புரண்டு சென்றன.....
வேற எதுவும் சொல்ல முடியாமல் அவைகளை பாவமாக பார்த்து கொண்டு இருந்தாள் மங்களம்.....
"உனக்கு எதுக்கு மங்களம் இதெல்லாம்....நீ சும்மா இருக்க மாட்டியா"
'பின்ன என்னங்க இந்த நந்துவுக்கு என்ன வயசிருக்கும் பன்னண்டோ பதிமூனோ இருக்கும்... இந்த வயசிலேயே அம்மாவோட பொழப்ப கையில எடுத்துகிட்டான்..
அம்மாவோட பொழப்ப கையில எடுத்துகிட்டாலும் பரவால்ல அப்படியே அந்த அரக்க குணத்தையும் இல்ல கையில எடுத்துருக்கான் ..."

"அவன் அம்மாதான் அந்த வாயில்லா ஜீவன்கள போட்டு அடிச்சு இம்சை படுத்தறான்னா இந்த பொடியன் இவன் பங்குக்கும் அதுகள கஷ்ட படுத்துகிறான்..
சம்பாரிச்சு கொடுக்கற ஜீவன்களாச்சேன்னு கொஞ்சமாச்சும் பரிவு காட்டலாமில்லே"

"சரி விடு மங்களம் அவங்க பொழப்பு அப்படி அதான் அவுங்க அப்படி நடந்துக்குறாங்க "
"என்னங்க நீங்க இப்படி பேசறீங்க....
ஊர் உலகத்துல யாரும் ஆடு மாடு வளத்தறதே இல்லையா.... நம்ம வீட்லயும் தான் இருக்கு ...எல்லாரும் இப்படியா அந்த பிராணிகள கொடும படுத்தறாங்க"

"இவளும் ரெண்டு புள்ளைய பெத்தவதானே, ஒவ்வொரு உயிருக்கும் வலின்னு ஒண்ணு இருக்குன்னு ஏன் தெரிய மாட்டிங்குது "

"இவ பண்ற பாவத்துக்கெல்லாம் தான் அந்த ஆண்டவன் இவ புள்ளைய தண்டிச்சுட்டான் "
"இவ மூத்த புள்ளைய பாத்தீங்கில்லே குடிச்சு குடிச்சு கண்ட கண்ட நோயையும் வாங்கிகிட்டு வீட்டுக்கு ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம"

"நமக்கு எதுக்கு மங்களம் அடுத்த வீட்டு பிரச்சனை எல்லாம்"
"அதில்லீங்க நான் எதார்த்தத்ததான் சொல்றேன்,, இதோ நம்ம பின்னாடி வீட்ல இருக்காங்களே குருசாமி அவர எடுத்துகங்க...பேருதான் குருசாமி.... அர்ச்சனை,பூஜை, எல்லாம் ஊருக்குதான் உள்ளுக்குள்ள எத்தன அசிங்கம்...

அன்னதானத்துக்குனு பெரிய பெரியவங்க கொடுக்கற நன்கொடையை எல்லாம் பாதி அவுரே எடுத்துகிட்டு மீதிய கோயில்ல அன்னதானம் பண்றாரு."

"பசின்னு கோயில்ல வந்து சாப்புடற ஏழைகளுக்கு ஒரு நேரம் சாப்பாடு போட்டாலும் அது தரமா போடா வேண்டாமா ..."

"அவரு இந்த மாதிரி பண்ற பாவத்துக்கெல்லாம் தான் அந்த ஆண்டவன் அவரு புள்ளைய தண்டிச்சிட்டான் .....பாத்தீங்கில்லே அவரு புள்ளைய கை கால் வராமே எவ்வளவு கஷ்டபடுதுனு ..பாவம் அந்த புள்ளைய பாக்கும் போதெல்லாம் என் மனசு எவ்வளவு கஷ்ட படும் தெரியுங்களா "

"சரி சரி விடு மங்களம்.... நான் போயிட்டு வரேன்.."

நடந்து போகும் வழியில் மங்களம் பேசியதையே அசை போட்டுக்கொண்டே சென்றேன்....
மங்களம் இயற்கையிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவள் ....
கொஞ்சம் அதிகமாக பேசுவாளே தவிர அவளிடம் வேற எந்த குறையும் இல்லை ....

என் வீட்டிலும் ஐந்தாறு ஆடுகளும், நான்கு மாடும் இருக்கின்றன ..... எனக்கு தெரிந்த வரையில் மங்களம் அவைகளிடம் கடுமையாக நடந்து கொண்டது கிடையாது... அந்த பிராணிகளும் அவள் என்ன சொன்னாலும் கேட்கும் .... அன்பால் எதையும் சாதிக்கலாம் என்பது மங்களத்தின் கருத்து....

எங்கள் வீட்டில் செல்ல பிராணிகள் அவை.... அதுக எல்லாம் செத்தாலும் வீட்டுக்கு பின்னாடியே குழி தோண்டி பொதைப்பேனே தவிர கறிக்கட காரனுக்கு விற்க மாட்டேன் என்று சொல்லுவாள் ....

மங்களம் ஆடு மாடுகளின் பாலை விற்று காசாக்குவதில்லை... பாவம் அதோட குட்டிகள் குடிக்கறதுக்கு விடாமே அப்படி நம்ம காசு சம்பாரிக்க வேண்டாம் என்று சொல்லுவாள்...

யோசித்து கொண்டே சென்றதில் நடராஜனின் வீடு வந்திருந்தது... அவரிடம் பேசி விட்டு வீடு திரும்புகையில் மணி ஒன்பதை தாண்டி இருந்தது...

வழியில் ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் குளிரில் நடுங்கிக்கொண்டே சுருங்கி படுத்துக்கொண்டிருந்தான் .......
பார்க்க பாவமாக இருந்ததால் அவனை எழுப்பிக்கேட்டேன் ....

"தம்பி உனக்கு அம்மா அப்பா சொந்தம் யாரும் இல்லையா ஏன் இங்க வந்து படுத்து இருக்கேன்னு கேட்டேன் "

அவன் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் "ரொம்ப பசிக்குது" என்றான்......
உடனே நான் என் சட்டை பையைத் தொட்டு பார்த்தேன்... அதற்கு மேல் யோசிக்காமல்

"சரி வா என் கூட" என்று சொல்லி அவன் கையை பிடித்து அழைத்து சென்றேன்...
அவன் கை குளிரில் நடுங்கி கொண்டிருந்தது...

போகும் வழியில் சாலையோர கடையில் ஒரு சால்வையை வாங்கி அவனுக்கு போர்த்தி விட்டேன்.....
என்னிடம் மீதம் இருந்த பணத்தில் அவனுக்கு சாப்பிட வாங்கி கொடுத்து விட்டு ஐந்து ரூபாய்க்கு சாக்கலேட்டையும் வாங்கி அவன் சட்டை பையில் திணித்து விட்டு வந்தேன்..
வீட்டு வாசற்படியில் கால் வைக்கும் போதுதான் அரிசி வாங்க வேண்டும் என்பது ஞாபகம் வந்தது...

மங்களத்திடம் என்ன சொல்வது என்று யோசித்து கொண்டே உள்ளே சென்றேன்...
"என்னங்க இவ்வளவு நேரம்..... உங்களுக்கு உங்க நண்பர்கள பாத்துட்டா போதுமே நேரம் போறதே தெரியாதே... "
"சரி சரி வாங்க சாப்பிடலாம்..."
"மங்களம் அது வந்து......"
"என்னங்க யோசனை..... ஆங் சொல்ல மறந்துட்டனே நம்ம பக்கத்துக்கு வீட்டு ராஜுவுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம்....
அவனுக்கு ஸ்கூல் இருந்ததாலே சாயங்காலமா பாயாசம், பிரியாணி எல்லாம் செஞ்சாங்களாம்.... ராஜு வந்து குடுத்துட்டு போனாங்க...... வாங்க சாப்படலாம் சூடா இருக்கு..."

மட மடவென பிரியாணி பரிமாற ஆரம்பித்தாள்.... நான் சட்டையை கழற்றி சுவற்றில் மாட்டி கொண்டே மனதுக்குள் எண்ணிக் கொண்டேன் "நன்மை செய்தால் நன்மையே விளையும்" என்று.......

சாப்பிட்டு முடிவதற்குள் நடந்த எல்லாவற்றையும் மங்களத்திடம் கூறினேன்...
எல்லாவற்றையும் கேட்டு விட்டு மங்களம் என்னிடம் "என்னங்கே அந்த பையன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க வேண்டியதுதானே ....... நம்ம செல்வி தம்பி பாப்பா வேணும் தம்பி பாப்பா வேணும்னு கேட்டுட்டே இருந்தா....."

மங்களம் எனக்கு மனைவியாக கிடைத்ததற்கு நான் ஆண்டவனிடம் நன்றி தெரிவித்துக் கொண்டேன்...

Sunday, August 9, 2009

இன்னாப்பா ஒரே பேஜாரா கீது....

எம்பேரு கொருக்கு பேட்ட கஜா

இன்னா பேஜார்னாக்கா,நீ கேக்கறயேன்றதுக்கொசரம் உன் கையில மட்டும் சொல்றேன்....

நம்ம பேட்டையில கொக்கி குமாரு ஊட்டாண்ட நா டாவு கட்டிக்கீனுருக்கற சரோசா சரோசானு ஒரு பிகரு இருக்கீதுப்பா..... சொம்மா சொல்லக் கூடாது அதக் கண்டுக்கனுதிலருந்து என் மன்சு என்னாண்ட இல்லப்பா.......

குமாரு ஊட்டாண்ட நா போக சொல்ல அது என்ன சும்மாங்காட்டியும் பாத்து பாத்து சிரிச்சிது....அய்யாவுக்கு லவ் மூடு ஸ்டாட் ஆயிடுச்சி...

நம்மளும் சும்மா காஞ்சு போன தோல் செருப்பாட்ட வெறப்பா இருக்க கூடாதுன்னு கவுண்டமணி அண்ணாத்தே மாறி அப்பட்யே சோக்கா ஒரு ரொமான்டிக் லுக்கு உட்டேன்...இன்னா அதிசயம்பா என்கு கூட பிகரு உஷராயிடுச்சு...

சரோசாவ நாலு எடத்துக்கு இட்டாந்து சோக்கா சுத்திக் காட்லாமுனு நென்ச்சு நம்ம மெரினா பீச்சாண்ட இட்டாந்தேன்..

சரோசாவுக்கு மல்லியப்பூவும் வருத்த கடலையும் வாங்கி குடுத்து பேசிக்குனு இருந்தேன்ப்பா.....

திடீர்னு பாத்தாக்க எங்களுக்கு எதிராண்ட ரெண்டு போலீசு காரவுக நின்னுகிட்டு இருந்தாக.... இன்னா சார்னு நான் மருவாதையா தான்பா கேட்டேன் ....."டே எந்திரீடா..... எங்கிருந்துடா இவள தள்ளிட்டு வந்தே.. ஓடுடா இங்கிருந்துனு எங்கள வெரட்டி உட்டுட்டாங்கபா..

சரி போவுது சரோசா கண்ணு.... வா நம்ம ஊட்டுக்கு போவோமுன்னு பஸ்சுல இஸ்துகினு வர சொல்ல, அந்த பஸ்சுல வந்த பயலுவெல்லாம் எங்களையே பாத்துக்கினே வந்ததுக...

அப்போ சரோசா என்ன பாத்து ஒன்னி கேட்டுச்சு, "இன்ன மாமா இதுக்கு மின்ன இவுக ஆம்பளயையும், பொம்பலயையும் பாத்ததே இல்லையானு"..

போவட்டும் உடு சரோசா கண்ணுன்னு சொல்லி நம்ம பேட்டயாண்டம் இஸ்துகினு வந்தேன்...அங்க ஒரு சொவுரு இருந்துச்சுப்பா....

சரீ ஊட்டாண்ட வந்துட்டமே ஊட்டுக்கு போனா பேச முடியாதேன்னு அந்த சொவுத்துகிட்டயே வெச்சு சரோசாண்ட ரெண்டு வார்த்த ஆசயா பேசிப்புடலாமுனு பாத்தா நம்மள கிராஸ் பண்ணி ரெண்டு மாமிக போனாங்கப்பா ...

போகயில அவுக, "இதுகளுக்கெல்லாம் வேற வேலையே இல்ல எப்ப பாரு எதாவது ஒரு செவுத்துக்கிட்ட நின்னு பேசிட்டு இருக்குதுக....அப்புடி இப்புடின்னு ரோட்டு வழியா நடக்கவே முடியலனு சொல்லிட்டு போவுதுக "......

இன்னாடா ஒரே பேஜாரா கீதேன்னு சரி அங்க நின்னு பேச வேண்டாமுன்னு கோயிலாண்டம் இட்டாந்தேன்...

அங்க வெச்சு ரெண்டு வார்த்த பேசி புடலாமுனு பார்த்தா ஒரு பெருசு நம்மள கடந்து போக சொல்லோ அது கையாலேயே அது தலையில தட்டிகினு,

"இந்த வயசு பசங்க புள்ளைகளோட தொந்தரவு தாங்க முடியல... இதுகெல்லாம் காதலிக்குதாம்... போய் சீக்கரமா கல்யாணம் பண்ண வேண்டியதுதானேன்னு" சொல்லிட்டு போகுதுப்பா , அந்த பெருசுக்கு நான் இன்னாப்பா த்ரோவம் பண்ணேன் ........

இன்னாப்பா இது ஒரே அக்கிரிமமா இருக்கீது.... எங்கள மாறி காதலிக்கருவக எல்லாம் எங்குட்டுப்பா போவறது ..

லவ்வர இஸ்துகினு வந்து கோயிலான்டையும் நின்னு பேச முடியல.... ரோட்டான்டையும் நின்னு பேச முடியல..... கடலான்டையும் ஒக்காந்து பேச முடியல...

கொயந்தீக வெலயாடனமுன்னா அதுகளுக்கு சில்ட்ரேன்ஸ் பார்க்கு கீது....

பெருசுகளுக்கு கோயில் கொளம் கீது....

எங்கள மாறி எலசுகளுக்கு டாவு கட்டறதுக்கு எதாச்சும் எடமிருந்தா சொல்லுங்குப்பா....

இன்னாப்பா ஒரே பேஜாரா கீது.....

அண்ணாத்தே படிச்சுட்டு சொம்மாங்காட்டியும் போவாமே எதுனாச்சும் ப்ளேசு இருந்தா என் கையில சொல்லிட்டு போப்பா ........

Tuesday, August 4, 2009

மனிதனே நீ மனிதனா?

தலைப்பைப் படித்து விட்டு யோசித்துப் பார்க்கிறீர்களா?
யோசித்து
உங்களுக்குள் ஒரு நல்ல முடிவை எடுத்தால் மகிழ்ச்சி.

உங்களுக்குள் இருக்கும் மனிதனை எப்பொழுதாவது தேடி இருக்கிறீர்களா?
நாளுக்கு நாள் மனிதன் எடுக்கும் ஒவ்வொரு பரிமாணத்தால் இயற்கை எத்தனை அழிவுகளை சந்தித்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்?
மனிதனே என்ன சாதித்திருக்கிறாய்?

"மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போலத் தன்னை தந்து தியாகி ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோயில் ஆகலாம்"
என்பது எவ்வளவு அழகான கண்ணதாசன் வரிகள் ஆனால் நம்மில் யாரவது இப்போது அப்படி இருக்கிறோமா?
இன்று மனிதனின் மனம் கோயில் ஆக
இல்லை
சுயநலத்தின் இருப்பிடமாக இருக்கிறது.

"
உலகம் அது அழகு கலைகளின் சுரங்கம்" ஆனால் இன்று அது அசுத்தத்தின் இருப்பிடமாக இருக்கிறது.

பூனையைப்
பார்த்திருக்கிறீர்களா ஐந்து அறிவுள்ள ஒரு சிறிய உயிர். அதன் நடவடிக்கைகளைக் கவனித்திருக்கீர்களா? அதற்கு இயற்கை உபாதை ஏற்படும் போது யாரும் காணாமல் மலம் கழித்து விட்டு அதை மூடி விட்டு செல்லும்...ஆனால் மனிதனோ அவசரம் என்று வந்து விட்டால் நடைபாதை ஓரங்களிலோ, செடியின் ஓரங்களிலோ எங்கு வேண்டுமானாலும் ஓடி விடுவான்

யார் தன்னை கேட்கப் போகிறார்கள் என்ற அலட்சியம்...
ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு அதான் கட்டி வைத்திருக்கிறார்களே "கட்டணக் கழிப்பிடம்" அதை உபயோகித்தால் என்ன?

ஒ!அதற்கு கட்டணம் தர வேண்டுமோ? ஆனால் இயற்கைக்கு தர வேண்டாமே! மனிதா உன்னை நீ எப்பொழுது திருத்திக் கொள்ளப் போகிறாய்?

இயற்கைக்கு
உன்னால் எவ்வளவு தீங்கு விளைகிறது என்பதற்கு ஒரு உதாரணம்....
சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று மனிதனால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்துக் குறித்து ஆய்வு ஒன்று நடத்தியது.... இயற்கை பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் அனுப்புமாறும் கேட்டிருந்தது... அதில் வெற்றி பெற்ற புகைப்படம் எது தெரியுமா? கடலுக்கடியில் வாழும் டால்பின் என்ற உயிரினம் அதன் கழுத்தில் நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கவரோடு நீந்தி வரும் காட்சிதான்..... இப்படியே போனால் உலகம் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை..



எத்தனை வகையில் இயற்கை நம்மால் பாதிக்கப்படுகிறது......
வாகனப்புகையாலும்,தொழிற்சாலை புகையாலும் காற்றுமண்டலம் அசுத்தப்படுத்தப்பட்டு இன்று ஓசோன் படலம் ஓட்டை பட்டு அடுத்த ஒரு பேரழிவுக்காகக் காத்திருக்கிறோம்.....
இயற்கையை அழித்தது போதாது என்று மனிதா நீ உன்னையே அழித்து வருகிறாய்.........
புரியவில்லையா? "தீவிரவாதம்"







இதைப் படிக்கும் போது உங்களுக்குத் தோன்றும் "ச்சே ஏன் எல்லாரும் இப்படி செய்யறாங்க" என்று....

"எல்லாரும்" என்று யோசிப்பதை விட நீங்கள் இந்த சமூகத்தில் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்....

நான் என்ன தப்பு செய்தேன் என்று நினைக்காதீர்கள்......முகம் காட்டும் கண்ணாடி முன் நின்றால் உங்கள் உருவம் தெரிகிறதா? அதைப்போல்தான் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களும் உங்களின் பிரதிபலிப்புதான்.....

நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமைதான் விளையும்...

யாரோ ஒருவரின் சுயநலத்தாலும் பணத்தாசையலும் தானே இன்று தீவிரவாதம் பெருகி வருகிறது...


ஒளி வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்த மும்பை தாஜ் ஹோட்டேல்லின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்....
இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் எத்தனை உயிரிழப்பு.....
இதன் மூலம் அவர்கள் சாதித்து கொண்டதுதான் என்ன.....
உங்களில் எத்தனைப் பேருக்கு இந்த உலகம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியும்...

அதைக் காப்பற்ற உங்களில் யாரவது முயற்சி செய்திருக்கிறீர்களா?
உங்கள் கைகளால் ஒரு மரக்கன்றை நட்டு வைத்திருக்கிறீர்களா?

அரசாங்கம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறதே "வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்" என்று செய்திருக்கிறீர்களா?

வேறொன்றும் வேண்டாம் இதைப் பற்றி விவாதித்திருப்போமா?
டீக்கடை பெஞ்சில், வீட்டுத் திண்ணயில், அலுவலகத்தில் தேநீர் இடைவேளையில், அலுவலகத்துக்குச் செல்லும் போது ரயிலில், பேருந்தில், எப்போதாவது விவாதித்திருப்போமா?

எங்கே அந்த நடிகர் நடிச்ச படம் ஓடலையே? அந்த நடிகை போட்டிருந்த டிரஸ் நல்லா இருந்ததில்லே? அறிவைத் தூண்டுவது பழைய பாடலா? அல்லது புதிய பாடலா? என்று பட்டி மன்றம் வைத்து பொழுதைக் கழிக்கவே நேரம் சரியாய் இருக்கிறது....

எங்கே நாம் உலகம் வெப்ப மயமாதல் பற்றி விவாதிக்கப் போகிறோம்...
ஊடகங்களிலாவது மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் எதாவது ஒரு நிகழ்ச்சிஉலகம்வெப்ப மயமாதல் பற்றி வந்ததுண்டா?

நடனப் போட்டிக்கும், பாட்டுப் போட்டிக்கும், மற்ற நிகழ்ச்சிக்கும் பணத்தை வாரி வாரி இறைக்கும் ஊடகங்கள் உலகம் வெப்ப மயமாதல் பற்றியும் ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்க செலவு செய்யலாமே?

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளின் முகப் பூச்சுக்கு ஆகும் செலவில் பாதி கூட இதற்கு ஆகாதே?

ஆறடி நிலத்துக்குள் அடங்கப் போகும் உடம்பிற்காக இன்னும் இயற்கைக்கு எத்தனை அழிவுகளை உண்டாக்கப் போகிறோம்,,,

மனிதன் தன் ஆதாயத்துக்காக தன் சுயநலத்துக்காக இயற்கையைப் பாழாக்குவது எப்படி இருக்கிறது என்று தெரியுமா.... மரத்தின் நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு அதன் அடிக் கிளையை வெட்டுவது போலாகும்..

இறுதியில் அழிவது மனிதனாகத்தான் இருக்கும்..

பணம் பணம் என்று மனிதருக்குள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அந்தக் காகிதத்தின் பின்னால் ஓடி என்ன சாதித்து விட்டோம்?......
பணம் பணம் என்று ஓடி இறுதியில் உங்கள் உதடுகள் உச்சரிக்கும் வரிகள் இதுவாகத்தான் இருக்கும்.
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்..."


நண்பர்களே ! அரிதாரம் பூசி வாழும் உங்கள் முகத்திரையைக் கிழித்தெறியுங்கள்....
மனிதராக வாழுங்கள்..........

என் கருத்துக்கள் உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் பின்னூட்டம் இடவும்...நன்றி......