Monday, August 24, 2009

நன்மை செய்தால் நன்மை உண்டாகும்

"என்னங்க வெளிய கெளம்பிட்டு இருக்கீங்களா "
"ஆமா மங்களம் நம்ம நடராஜன பாத்துட்டு வரலாமுன்னு கெளம்பறேன்"
"சரிங்க, அப்ப கடைத் தெரு வழியாத்தானே போவீங்க"
"ஆமா மங்களம் எதாவது வாங்கிட்டு வரணுமா"
"ஆமாங்க மாசக் கடைசி வேற , எல்லா பொருளும் தீர்ந்துடுச்சு, எதோ இருந்தத வெச்சு மதிய பொழுதுக்கும் சமச்சுட்டேன்... இனி அரிசி வாங்கிட்டு வந்தாதான் இராப்பொழுதுக்கு
எதாவது செய்ய முடியும்.."
"சரி மங்களம் வாங்கிட்டு வரேன் கெளம்பட்டுமா"
"சரிங்க" என்றவள் திடீரென வாசலுக்கு வெளியே பார்த்து சத்தமிட்டாள்.
"டேய் .. நந்து ஏண்டா அந்த மாட்டை பாவம் இப்படி அடிச்சு இழுத்துட்டு போறே"
"நீ சும்மா இருக்கா ....இதுகளையெல்லாம் இப்படி வெச்சுகிட்டாதான் சொன்னபடி கேட்கும்"
என்று கூறிவிட்டு அடுத்த பேச்சுக்கு காத்திராமல் ஹோய் ஹோய் என்று சத்தமிட்டு கொண்டே ஆடுகளையும் மாடுகளையும் வீட்டிற்கு விரட்டி சென்றான்...

அவனுடைய அந்த அதட்டல் குரலிலேயே அவைகள் தலைதெறிக்க ஓடின...
பாவம் இரண்டு கால்களும் சேர்த்து கட்டப்பட்டு நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் விழுந்து புரண்டு சென்றன.....
வேற எதுவும் சொல்ல முடியாமல் அவைகளை பாவமாக பார்த்து கொண்டு இருந்தாள் மங்களம்.....
"உனக்கு எதுக்கு மங்களம் இதெல்லாம்....நீ சும்மா இருக்க மாட்டியா"
'பின்ன என்னங்க இந்த நந்துவுக்கு என்ன வயசிருக்கும் பன்னண்டோ பதிமூனோ இருக்கும்... இந்த வயசிலேயே அம்மாவோட பொழப்ப கையில எடுத்துகிட்டான்..
அம்மாவோட பொழப்ப கையில எடுத்துகிட்டாலும் பரவால்ல அப்படியே அந்த அரக்க குணத்தையும் இல்ல கையில எடுத்துருக்கான் ..."

"அவன் அம்மாதான் அந்த வாயில்லா ஜீவன்கள போட்டு அடிச்சு இம்சை படுத்தறான்னா இந்த பொடியன் இவன் பங்குக்கும் அதுகள கஷ்ட படுத்துகிறான்..
சம்பாரிச்சு கொடுக்கற ஜீவன்களாச்சேன்னு கொஞ்சமாச்சும் பரிவு காட்டலாமில்லே"

"சரி விடு மங்களம் அவங்க பொழப்பு அப்படி அதான் அவுங்க அப்படி நடந்துக்குறாங்க "
"என்னங்க நீங்க இப்படி பேசறீங்க....
ஊர் உலகத்துல யாரும் ஆடு மாடு வளத்தறதே இல்லையா.... நம்ம வீட்லயும் தான் இருக்கு ...எல்லாரும் இப்படியா அந்த பிராணிகள கொடும படுத்தறாங்க"

"இவளும் ரெண்டு புள்ளைய பெத்தவதானே, ஒவ்வொரு உயிருக்கும் வலின்னு ஒண்ணு இருக்குன்னு ஏன் தெரிய மாட்டிங்குது "

"இவ பண்ற பாவத்துக்கெல்லாம் தான் அந்த ஆண்டவன் இவ புள்ளைய தண்டிச்சுட்டான் "
"இவ மூத்த புள்ளைய பாத்தீங்கில்லே குடிச்சு குடிச்சு கண்ட கண்ட நோயையும் வாங்கிகிட்டு வீட்டுக்கு ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம"

"நமக்கு எதுக்கு மங்களம் அடுத்த வீட்டு பிரச்சனை எல்லாம்"
"அதில்லீங்க நான் எதார்த்தத்ததான் சொல்றேன்,, இதோ நம்ம பின்னாடி வீட்ல இருக்காங்களே குருசாமி அவர எடுத்துகங்க...பேருதான் குருசாமி.... அர்ச்சனை,பூஜை, எல்லாம் ஊருக்குதான் உள்ளுக்குள்ள எத்தன அசிங்கம்...

அன்னதானத்துக்குனு பெரிய பெரியவங்க கொடுக்கற நன்கொடையை எல்லாம் பாதி அவுரே எடுத்துகிட்டு மீதிய கோயில்ல அன்னதானம் பண்றாரு."

"பசின்னு கோயில்ல வந்து சாப்புடற ஏழைகளுக்கு ஒரு நேரம் சாப்பாடு போட்டாலும் அது தரமா போடா வேண்டாமா ..."

"அவரு இந்த மாதிரி பண்ற பாவத்துக்கெல்லாம் தான் அந்த ஆண்டவன் அவரு புள்ளைய தண்டிச்சிட்டான் .....பாத்தீங்கில்லே அவரு புள்ளைய கை கால் வராமே எவ்வளவு கஷ்டபடுதுனு ..பாவம் அந்த புள்ளைய பாக்கும் போதெல்லாம் என் மனசு எவ்வளவு கஷ்ட படும் தெரியுங்களா "

"சரி சரி விடு மங்களம்.... நான் போயிட்டு வரேன்.."

நடந்து போகும் வழியில் மங்களம் பேசியதையே அசை போட்டுக்கொண்டே சென்றேன்....
மங்களம் இயற்கையிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவள் ....
கொஞ்சம் அதிகமாக பேசுவாளே தவிர அவளிடம் வேற எந்த குறையும் இல்லை ....

என் வீட்டிலும் ஐந்தாறு ஆடுகளும், நான்கு மாடும் இருக்கின்றன ..... எனக்கு தெரிந்த வரையில் மங்களம் அவைகளிடம் கடுமையாக நடந்து கொண்டது கிடையாது... அந்த பிராணிகளும் அவள் என்ன சொன்னாலும் கேட்கும் .... அன்பால் எதையும் சாதிக்கலாம் என்பது மங்களத்தின் கருத்து....

எங்கள் வீட்டில் செல்ல பிராணிகள் அவை.... அதுக எல்லாம் செத்தாலும் வீட்டுக்கு பின்னாடியே குழி தோண்டி பொதைப்பேனே தவிர கறிக்கட காரனுக்கு விற்க மாட்டேன் என்று சொல்லுவாள் ....

மங்களம் ஆடு மாடுகளின் பாலை விற்று காசாக்குவதில்லை... பாவம் அதோட குட்டிகள் குடிக்கறதுக்கு விடாமே அப்படி நம்ம காசு சம்பாரிக்க வேண்டாம் என்று சொல்லுவாள்...

யோசித்து கொண்டே சென்றதில் நடராஜனின் வீடு வந்திருந்தது... அவரிடம் பேசி விட்டு வீடு திரும்புகையில் மணி ஒன்பதை தாண்டி இருந்தது...

வழியில் ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் குளிரில் நடுங்கிக்கொண்டே சுருங்கி படுத்துக்கொண்டிருந்தான் .......
பார்க்க பாவமாக இருந்ததால் அவனை எழுப்பிக்கேட்டேன் ....

"தம்பி உனக்கு அம்மா அப்பா சொந்தம் யாரும் இல்லையா ஏன் இங்க வந்து படுத்து இருக்கேன்னு கேட்டேன் "

அவன் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் "ரொம்ப பசிக்குது" என்றான்......
உடனே நான் என் சட்டை பையைத் தொட்டு பார்த்தேன்... அதற்கு மேல் யோசிக்காமல்

"சரி வா என் கூட" என்று சொல்லி அவன் கையை பிடித்து அழைத்து சென்றேன்...
அவன் கை குளிரில் நடுங்கி கொண்டிருந்தது...

போகும் வழியில் சாலையோர கடையில் ஒரு சால்வையை வாங்கி அவனுக்கு போர்த்தி விட்டேன்.....
என்னிடம் மீதம் இருந்த பணத்தில் அவனுக்கு சாப்பிட வாங்கி கொடுத்து விட்டு ஐந்து ரூபாய்க்கு சாக்கலேட்டையும் வாங்கி அவன் சட்டை பையில் திணித்து விட்டு வந்தேன்..
வீட்டு வாசற்படியில் கால் வைக்கும் போதுதான் அரிசி வாங்க வேண்டும் என்பது ஞாபகம் வந்தது...

மங்களத்திடம் என்ன சொல்வது என்று யோசித்து கொண்டே உள்ளே சென்றேன்...
"என்னங்க இவ்வளவு நேரம்..... உங்களுக்கு உங்க நண்பர்கள பாத்துட்டா போதுமே நேரம் போறதே தெரியாதே... "
"சரி சரி வாங்க சாப்பிடலாம்..."
"மங்களம் அது வந்து......"
"என்னங்க யோசனை..... ஆங் சொல்ல மறந்துட்டனே நம்ம பக்கத்துக்கு வீட்டு ராஜுவுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம்....
அவனுக்கு ஸ்கூல் இருந்ததாலே சாயங்காலமா பாயாசம், பிரியாணி எல்லாம் செஞ்சாங்களாம்.... ராஜு வந்து குடுத்துட்டு போனாங்க...... வாங்க சாப்படலாம் சூடா இருக்கு..."

மட மடவென பிரியாணி பரிமாற ஆரம்பித்தாள்.... நான் சட்டையை கழற்றி சுவற்றில் மாட்டி கொண்டே மனதுக்குள் எண்ணிக் கொண்டேன் "நன்மை செய்தால் நன்மையே விளையும்" என்று.......

சாப்பிட்டு முடிவதற்குள் நடந்த எல்லாவற்றையும் மங்களத்திடம் கூறினேன்...
எல்லாவற்றையும் கேட்டு விட்டு மங்களம் என்னிடம் "என்னங்கே அந்த பையன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க வேண்டியதுதானே ....... நம்ம செல்வி தம்பி பாப்பா வேணும் தம்பி பாப்பா வேணும்னு கேட்டுட்டே இருந்தா....."

மங்களம் எனக்கு மனைவியாக கிடைத்ததற்கு நான் ஆண்டவனிடம் நன்றி தெரிவித்துக் கொண்டேன்...

1 comment:

  1. அருமையான கதை மற்றும் உண்மையும் கூட... விதைத்ததுதான் விளையும் என்பதற்கு எடுத்துக்காட்டு... ஊர் பணத்தை கொள்ளயைடித்து இன்று கோடிகளில் புரளும் வெள்ளைவேட்டி கொள்ளையர்கள்தான் இதற்கெல்லாம் சிறந்த உதாரணம் எடுத்துக்காட்டு... ஏசி காரு வச்சிருப்பான் அவனுக்கு மூலும் இருக்கும்... ஊர்சொத்தை அபகறித்து பெரிய சொத்துகாரனாக இருப்பான் அவனுக்கு சர்கரைநோய்இருக்கும் குடிப்து கூலகா இருக்கும்..

    ReplyDelete