Saturday, August 1, 2009

நண்பனும் நானும்......

"அய்யையையோ! எப்ப பாரு எதோ ஒரு டார்செர்....ஆபீஸ்ல தான் மண்டைய பிளக்கற மாதிரி வொர்க் பிரஷர் ன்னு பார்த்தா வீட்டுக்கு வந்தா அத விட பயங்கர தொல்ல.
எப்ப பாரு கல்யாணம் பண்ணிக்கோ அத பண்ணிக்கோ இத பண்ணிக்கோன்னு தொந்தரவு பண்ணாதீங்க " என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
"என்னடா அங்க சத்தம்" என்று அவனை அழைத்து விசாரித்தேன்."பின்ன என்னடா இருக்கற ப்ரொப்லெம்ஸ் போதாதுன்னு இப்ப இது வேறயா? ஏற்கனவே வேலை பளுவுல மண்டையில இருக்கற முடியெல்லாம் உதிருது, இனி கல்யாணம்னு ஒன்ன பண்ணிகிட்டா அவ வந்த கொஞ்ச நஞ்சம் இருக்கற முடியையும் மொட்டை அடிச்சுடுவா" என்றான்.
வேலை பளு காரணமாகத்தான் அவன் இப்படி பேசுகிறான் என்று எனக்கு புரிந்தது.
அவனிடம் "சரிடா அதன் அஞ்சு நாள் சேந்த மாதிரி லீவு வருதே எங்கயாவது வெளிய போய்ட்டு வரலாம் உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் கெடச்ச மாதிரி இருக்கும் போலாமா" என்றேன்.அவனும் ஒத்துக் கொண்டான், என் அம்மா பிறந்த ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.
ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியுடன் அந்த மாட்டு வண்டி குலுங்கி கொண்டே சென்று கொண்டிருந்தது. நானும் என் நண்பனும் அதில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமேஅந்த ஊருக்கு பேருந்து வந்து செல்லும் அதனால் மாட்டு வண்டியில் இயற்கையை ரசித்துக்கொண்டே சென்று கொண்டு இருந்தோம்.
இயற்கை அன்னையின் கண் பார்வை அந்த கிராமத்தின் மேல் அதிகமாகவே இருந்தது.
தூரத்தில் வேப்ப மரத்தில் தூளியைக் கட்டித் தன் குழந்தையைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள் ஒரு தாய்.
கோவில் என்று பெயர் ஆனால் சுற்றிலும் சுவர் எழுப்பப்படவில்லை, ஒரு கல் அதன் மேல் சிறுது குங்குமமும் மஞ்சளும் பூச பட்டிருந்தது, அதை இரண்டு பெண்கள் நின்று கும்பிட்டு கொண்டு இருந்தனர்.
சிறிது தூரம் தள்ளி சிறுவர்கள் பச்சைக்குதிரை விளையாடிக் கொண்டிருந்தனர். அநேகமா உங்களில் பலருக்குப் பச்சை குதிரை என்றால் என்ன என்று தெரியாது என நினைக்கிறேன் ஏனென்றால் தாய் மடியில் தவழும் குழந்தை கூட வீடியோ கேம்ஸ் விளையாடும் காலத்தில் இருக்கிறோம்.
ஆல மரத்தடியில் நான்கு பெரியவர்கள் இடுப்பில் ஒரு வேட்டியும் ஒட்டிய வயிறுமாக அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர்.
எங்களை தவிர மாட்டு வண்டியில் ஒரு முண்டாசு கட்டிய முதியவரும், அவரது பேத்தியும் இருந்தார்கள்.
பேத்தி சுண்டி இழுக்கும் அழகு இல்லை என்றாலும் கண்களில் வசீகரிக்கும் அழகுடன் இருந்தாள்.இதை எல்லாம் பார்த்துக்கொண்டே வந்து கொண்டிருந்த பொழுது அந்தப் பெரியவர் திடீரென அமைதியைக் கலைத்தார். "தம்பி எந்த ஊர்ல இருந்து வரீங்க "என்று கேட்டார்.
"சென்னை ல இருந்து வரோம் பெரியவரே"
"நல்லது கண்ணு ஆரு ஊட்டுக்குப் போறீங்க"
"இங்க ஷண்முகநாதன் வாத்தியார் இருக்காரு இல்ல அவர் வீட்டுக்கு போறோம்"
"எதுக்காக வந்து இருக்கீக அவகளுக்கு நீங்க ஏதாவது சொந்தமா"
"ஒரு வகையில தூரத்து உறவு ரெண்டு நாள் தங்கி ஊர சுத்தி பாத்துட்டு போலாம்னு வந்தோம்"
"ஆகட்டுங் கண்ணு நம்ம வூடும் அவுக வூட்டுப் பக்கத்துலதான் இருக்கு அப்படியே நம்ம வூட்டுக்கும் வந்துட்டு போங்க"
"கண்டிப்பா வந்துட்டு போறோம்"
எங்களிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு அவரும் பேத்தியும் சென்று விட்டார்கள். செல்லும் போது பேத்தி மட்டும் கண்ணாலேயே என் நண்பனிடம் விடைப் பெற்று சென்றாள். நாங்களும் ஒரு வழியாக வாத்தியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.அவர் வீட்டில் குளித்து முடித்து சாப்பிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலை நான்கு மணி அளவில் வெளியில் கிளம்பினோம்.
"மச்சான் சூப்பரா இருக்குடா ஊரு, நீ கிராமம்னு சொன்னதும் கருத்தம்மா படத்தில வர மாதிரி காஞ்ச பட்டிகாட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவியோனு நெனச்சேன் சும்மா சொல்லக் கூடாது உனக்கும் கொஞ்ச ரசன இருக்குடா"
"அத விடு ஆமா வண்டியில வரும் போது அந்தப் பெரியவரோட பேத்தி கூட கண்ணாலேயே கதக்களி ஆடிட்டு வந்தியே , என்ன விஷயம்?
"ஹி ஹி பார்த்துட்டியா அது ஒண்ணுமில்ல சும்மா உலுலாய்க்கு "
"வேண்டாண்டா வந்த எடத்தில எந்த சில்மிஷமும் பண்ணாதே"
பேசிக்கொண்டே பெரியவர் வீட்டை நெருங்கி விட்டோம், எங்களைப் பார்த்ததும் வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்த பேத்தி வேகமாக உள்ளே ஓடி விட்டாள் இரண்டு நிமிடத்தில் பெரியவர் வெளியே வந்தார்,
"அடடே வாங்க தம்பிகளா வாங்க"
வேக வேகமாக துண்டை எடுத்து திண்ணையைத் துடைத்து "உக்காருங்க தம்பி " என்றார்.
"என்ன சாப்புடுறீங்க இருங்க குடிக்க எதாவது கொண்டாரா சொல்றேன்" என்று எங்களைக் கேட்காமலே உபசரித்தார்.
"அம்மா துளசி தம்பிகளுக்கு குடிக்க மோரு கொண்டாம்மா"
பெயரைக்கேட்டதும் என் நண்பனின் முகத்தில் தௌசண்ட் வாட்ட்ஸ் பல்பு எரிந்தது.
சில்வர் தம்ளரில் மோரை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஆச்சரியம்,சிறியதான மண் குடுவையில் கொண்டு வந்தாள். பச்சை மிளகாய் அறுத்து போட்டு கொத்தமல்லி மணமணக்க மோர் தித்தித்தது.
என் நண்பனின் கண்கள் அவளையே தேடிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அவரிடம் பேசி விட்டு கிளம்பினோம் செல்லும் போதாவது வெளியே வருவாள் என்று என் நண்பன் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவள் வரவில்லை.
பெரியவர் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி நடந்து இருப்போம் என் நண்பன் திரும்பி பார்ப்பதும் பின்னர் நடப்பதுமாக இருந்தான்.நான் அவனை பார்த்த போதுஅவனுடைய முகத்தில் அதே தௌசண்ட் வாட்ட்ஸ் பல்பு எரிந்தது என்ன காரணம் என்று நானும் திரும்பி பாத்தேன். அரளிப்பூ செடியின் மறைவில் நின்று அவளும் இவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஐந்து நாட்களாக ஊரை சுற்றிப்பார்த்து விட்டு இயற்கை அன்னையின் வரத்தைப்பெற்று விட்டோம். அடுத்த நாள் சென்னை திரும்பலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். செல்வதற்கு முன்பு பெரியவரிடம் சொல்லி விட்டு வரலாம் என்று சென்றோம் அவர் வீட்டுக்கு செல்கிறோம் என்று தெரிந்ததும் என் நண்பனுடைய ஒப்பனை இன்று கூடுதலாக இருந்தது. எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
பெரியவர் வீட்டு வாசலை நெருங்க நெருங்கவே அழு குரல் கேட்டது,குழப்பத்துடன் உள்ளே சென்றோம். அங்கே துளசி முழங்கால்களை கட்டி பிடித்த படி சாமிப்படத்தின் கீழ் உக்காந்து அழுது கொண்டிருந்தாள்.
"உங்க ஆத்தா போனதும் நானும் போய் சேர்ந்திருந்தா இந்த கொடுமை எல்லாம் பாக்க வேண்டி இருந்திருக்காதே இந்த வக்கத்தவன் வீட்ல வந்து என்னத்துக்கு பொறந்தே, வா ரெண்டு பெரும் போய் எதாவது ஆத்துல கொளத்துல விழுந்து சாவோம்" என்று பெரியவரும் அழுது கொண்டிருந்தார்.
எங்களைப் பார்த்ததும் பெரியவர் பெரிதாக அழத் தொடங்கினார். காரணம் விசாரித்தோம்
"என்ன தம்பி சொல்றது இவ பொறந்த இடமும் சரி இல்ல வாக்கப்பட்டு போன இடமும் சரி இல்ல" என்றார், இதை கேட்டதும் எனக்குள் சற்று அதிர்ந்தேன் நான் எதிர்ப்பார்த்து போல் என் நண்பன் திக் பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தான்.
அவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
"இவள நல்லா வெச்சுக்குவான்னு நெனச்சுதான் என் சொந்த அக்கா மவனுக்கே கட்டி வெச்சேன் ஆனா அந்தப் பாவி பய இவள விட்டுட்டு வேற ஒரு சிறுக்கிய வெச்சுருக்கான்,சம்பாதிக்கற எல்லாத்தையும் அவளுக்கே செலவழிச்சுட்டு இவள தினம் அடிச்சு கொடும படுத்தறான், தங்கம் மாதிரி அனுப்பி வெச்ச எம் புள்ளைய இப்படி நாசப்படுத்தி திருப்பி அனுப்பிட்டான் தம்பி...
அவன அறுத்து விட்டுட்டு என் ஒடம்புல உசிரு ஓட்டிட்டு இருக்கற வரையும் அந்த புள்ளைய நிம்மதியா வாழ வெக்கலாம்னு பாத்தா அந்த படு பாவி பய வாரம் ஒரு தடவ இங்க வந்து என் கண்ணு முன்னாடியே என் புள்ளைய பூட்டு அடிச்சு கொடும படுத்தறான் தம்பி அவள் கழுத்தில் தாலி இல்லை அதையும் அவன் கணவன் பிடுங்கி விட்டான் என்பது பின்னர் தான் தெரிந்தது.
"ஊர் பெரியவங்க எல்லாம் பேசி பாத்துடோம் தம்பி அந்த கடன்காரன் கேக்கறதா இல்ல தம்பி இந்த தள்ளாத வயசில அந்த காளியாத்தா இதை எல்லாம் பாக்க வெச்சுட்டாளே"
"காளியாத்தா எம் புள்ளைக்கு ஒரு நல்ல வழிய காட்டும்மா" என்று புலம்பிக்கொண்டே வெளியே சென்றார்.
இந்த கடைசி வரியை அவர் சொல்லும் போது துளசியின் அழுகுரல் பெரிதாக கேட்டது.
சென்னை வந்து சேரும் வரை நாங்கள் இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. மனம் கனத்து போயிருந்தது .
சென்னை காலை பத்து மணி. ஆபீசில் எதையோ பறிகொடுத்தவன் போல் அமர்ந்திருந்தான் என் நண்பன்.மதியம் உணவு இடை வேளையில் அவனிடம் பேச்சு கொடுத்தேன்,
அவனே என்னிடம் பேச ஆரம்பித்தான்,
"நான் உன்கிட்ட ஒன்னு சொல்லப்போறேன் அத நீ எப்படி எடுத்துகுவேன்னு தெரியல.... எனக்கு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாத அனாத.. ஆனா நான் இப்ப ஒரு புது உறவ என்கூட சேர்த்துக்கலாம்னு நெனைக்கறேன்...ஆமா துளசிய நான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்து இருக்கேன்..... "
"அவ கல்யாணம் ஆனவ"
"அது அவ வாழ்கையில் நடந்த ஒரு விபத்து..."
"இதுக்கு அவ ஒத்துக்குவாளா "
"கண்டிப்பா.. அவ கண்ல சோகத்தையும் மீறி காதல் தெரிஞ்சுது.. என்னமோ அவ எனக்காகவே பொறந்தவ மாதிரி தெரியுது"
"உறுத்திய இருக்கியா"
"இனி என் வாழ்கை அவ கூடத்தான்... அந்த துளசி தான் இனி என் வாழ்கையில் மணம் வீசப் போறா"
என் நண்பன் சொல்வது அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தேன்..
என் நண்பன் சொன்னதை நிறைவேற்றி விட்டான்.
"இப்பொழுது அவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது...இனிய இல்லறம்...என் நண்பன் சொன்னது போல் துளசி அவன் வாழ்கையில் அன்பு மணம் வீசிக்கொண்டிருக்கிறாள்....

3 comments:

  1. மீ த பர்ஸ்டே....

    ReplyDelete
  2. கதை மாதிரியே பசுமையான டெம்ப்ளேடும் சூப்பர்

    ReplyDelete
  3. //கதை மாதிரியே பசுமையான டெம்ப்ளேடும் சூப்பர//



    சின்ன அம்மணி நல்லா இருக்கீங்களா .....உங்கள் கருத்துக்களை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி.....

    ReplyDelete