Tuesday, September 22, 2009

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது (2)

ரொம்ப அசதியா இருக்கீங்களா அப்போ வாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்.... 
 

கால் வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயித்தில ஆபரேஷன் செய்திருக்கிறார் ...ஏன்னு நீங்க கேக்கலையா...?
ஏன் கேக்கணும் ...அந்த டாக்டர பத்தி தெரிஞ்சுதானே வயித்து வலிக்கு பதிலா கால் வலின்னு சொல்லி சேர்ந்தேன்....


என் தாத்தாவுக்கு நூறு வயசாகுது ... ஆனா இதுவரைக்கும் டாக்டர்கிட்ட போனதே கிடையாது..
உன் தாத்தாவுக்கு நூறு வயசுன்னு சொல்லும் போதே நெனச்சேன்...


ஐயோ  டாக்டர் என்ன இது சாவுக்கு முன் சாவுக்கு பின் அப்படின்னு எழுதியிருக்கு..?
அட ஏன் பதர்றீங்க ... சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அதத்தான் அப்படி சுருக்கமா  எழுதியிருக்கேன்..

ஊசி போட்ட பிறகும்  எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க..?
இல்ல.. உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு பாக்கணும் அதான்...

நீங்க இங்க கிளீனிக் ஆரம்பிச்சதிலிருந்து உங்கள தவிர இதுவரைக்கும் நான் வேற யார்கிட்டயும் பாக்கரதில்லே...
நானும் அப்படித்தான்.. உங்கள தவிர வேற யாருக்கும் இதுவரைக்கும் ட்ரீட்மென்ட் செஞ்சதே இல்ல..

இந்த டாக்டர் ஒரு அரசியல்வாதின்னு எப்படி சொல்றீங்க?
ஒட்டு எண்ணிக்கை குறைஞ்சுடும்னு தேர்தல் வரைக்கும் எந்த ஆபரேஷனும் செய்ய மாட்டேன்னு சொல்றாரே...

டாக்டர் மாப்பிள்ளையா பார்த்தது தப்பா போய்டுச்சு ..
ஏன் என்னாச்சு?
பெண் பாக்க வரீங்களான்னு  கேட்டதுக்கு  48மணி நேரம் போனதுக்கு அப்புறம் தான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிட்டாரு .....

ஆபரேஷன் பண்ணும் போது பிழைச்ச பேஷன்ட் தையல் பிரிக்கும் போது இறந்துட்டாரு..
அதெப்படி?
டாக்டர் ஏதோ நெனப்புல போஸ்ட் மாட்டம் பண்ணிட்டாரு..


அந்த டாக்டர் ரொம்ப மோசம்..
ஏன் அப்படி சொல்றீங்க?
பேஷன்ட்ட பாத்து நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்கறாரு ...
இதிலென்ன தப்பு?
ஆச்சரியமா கேக்கிறாரே?

ரேஷன் கடையில அரிசி பருப்பு எல்லாமே போடறாங்க..
உளுந்து போடறாங்களா?
உளுந்து எல்லாம் போடல உக்காந்துதான் போடறாங்க..


மீண்டும் சந்திப்போமா  ......

Thursday, September 10, 2009

திக் திக் திக்......

வானத்தில் நிலவு அன்று விடுமுறை எடுத்து இருந்தது......
நட்சத்திரங்களும் கூட ஆப்சென்ட் ...... எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது... அவ்வப்போது மின்னல் மட்டும் தலையை காட்டி விட்டு சென்றது...
அடித்த சூறைக் காற்றில் சருகுகளும் பேப்பர்களும் தலை தெறிக்க ஓடின ...
காரின் கண்ணாடிகளை ஏற்றி விட்டுக் கொண்டேன்  ... ஏக்சிலிரேட்டரில் காலை வைத்து  மிதித்தேன்  ... வண்டி வேகம் எடுத்து மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து சென்ற   மண் சாலையில் செல்ல ஆரம்பித்தது ... சிறிது தூரம் சென்றதும் வண்டி வித விதமான சத்தம் கொடுத்து விட்டு இனி நகர மாட்டேன் என்று நின்று விட்டது..அடச்சே..... சரியான நேரம் பாத்து கார் கால வாருதே... காரை லாக் செய்து விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன் ...
மழை துளி சில்லென்று முகத்தில் விழுந்தது...
அடக் கடவுளே இந்த நேரத்தில் வீட்ல இருந்து வெளிய வந்தது தப்போ ?
கையில் கட்டி இருந்த வாட்சை திருப்பி மணியை பார்த்தேன் ... அது ரேடியம் உபயத்தில் 10.50 என்று காட்டியது...
வேகமாக ஓடினால் கூட  போய் சேர இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுமே...
உதவிக்கு யாரையாவது கூப்பிட முடியுமான்னு கொஞ்ச தூரம் போய் பாக்கலாம்...
மழை வேகம் எடுத்தது... முற்றிலுமாக என்னை நனைத்தது....
ரெண்டு நாள் புயல் மழை பெய்யும்னு நியூஸ்ல வேற  சொன்னாங்க... இன்னைக்கே அப்படி அங்கே போய் ஆகணுமா ?   மனதுக்குள் நினைத்து கொண்டேன் ..
அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் காற்று பின்னால் தள்ளியது...
முயற்சியை கை விடாமல் நடக்க ஆரம்பித்தேன்..
அவ்வப்போது அடித்த மின்னல் வெளிச்சத்தில் மட்டுமே பாதை தெரிந்தது... காற்றில் மரங்கள் அசைவது ஒருவித கிலியை ஏற்படுத்தியது....
எப்படியாவது போயே தீர வேண்டும் மனதுக்குள் எண்ணிக் கொண்டே சென்றேன்..
யாரது..?
திடீரென்று பின்னால் இருந்து கரகரத்து போன குரல் கேட்க திக்கித்து போனேன்...
மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பினேன்..
கருப்பு நிறத்தில் ஒரு சால்வையை போர்த்திக் கொண்டு கையில் டார்ச்சுடன் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் நின்றிருந்தார்..
என் முகத்தில் டார்ச் லைட்டின் ஒளி வட்டத்தை செலுத்திக் கொண்டே கேட்டார்..
யார் நீங்க? இந்த நேரத்தில தனியா அதுவும் இந்த வழியா போறீங்க?
அய்யா ! இந்த வழியா எதாவது ஒர்க் ஷாப் இருக்குங்களா ?
இந்த வழியா வீடுகளே கிடையாது.. அப்பறம் எப்படி ஒர்க் ஷாப் இருக்க போகுது...?
நான் என் அத்தை வீட்டுக்கு கிளம்பி போயிட்டிருந்தேன்... வர வழியில மழை வேகமா வர ஆரம்பிச்சிடிச்சி .. சரி சீக்ரமா போலாம்னு இந்த குறுக்கு பாதையில வந்தேன் .. என் நேரம் கார் வேற பிரேக் டவுன் ஆயிடுச்சு..
இதப் பாருங்க உங்க நல்லதுக்காகத்தான்  சொல்றேன்...வந்த வழியாவே திரும்பி போய்டுங்க..மேற்க்கொண்டு இந்த வழியா தொடர்ந்து போகாதீங்க...
 ஏன் அப்படி சொல்றீங்க?
இந்த வழியா போனா எந்த வீடுகளும் கிடையாது.. மிஞ்சி மிஞ்சிப் போனா மெயின் ரோடுகிட்ட போனாதான் ஓரிரு வீடுகள் இருக்கும்..மெயின் ரோடுகிட்ட போகனும்னாலே நீங்க இன்னும் நாலு மணி நேரம் நடக்கணும்..அதுவும் இந்த வழியா போனா அப்பறம் உங்க உயிருக்கு நான் உத்தரவாதம் கிடையாது..
ஐ....ஐ...ஐயா ...ஏன் அப்படி சொல்றீங்க ?
இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு சுடுகாடு வரும்.. அங்க பகல் நேரத்திலேயே ஆவிகள் நடமாடறதா சொல்றாங்க ....இதுவரைக்கும் பன்னிரண்டு பேரு ஆவி அடிச்சு இறந்து போயிருக்காங்க .... ஆனா நீங்க இந்த அகால நேரத்தில தனியா போறேன்னு சொல்றீங்க.. வந்த வழியாவே திரும்பி போயிடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்...
என் உடல் முழுவதும் வெள்ளமாய் வியர்வை...இதயம் ஹை ஸ்பீடில் துடித்து கொண்டிருந்தது...
பேசாமல் திரும்பி போய் விடலாமா ? போனால் மட்டும் வீட்டிற்க்கு எப்படி போவது..?எத்தனை தூரம் நடப்பது...பேசாமல் அந்த பெரியவரிடமே எதாவது உதவி கேட்கலாம் என்று வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தேன்...
மழையின் வேகம் சற்று குறைந்திருந்தது..
கிட்டத்தட்ட ஓடுவதைப் போல் நடந்தேன்.. வழி முழுவதும் சேரும் சகதியும் காலை இடறி விட்டது..
கொஞ்ச தூரம் வந்திருப்பேன்... அந்த பெரியவரைக் காணவில்லை...என்ன அதிசயம் இவ்வளவு வேகத்தில் சென்று விட்டாரா.? அதெப்படி நான் இவ்வளவு வேகமாக ஓடி வந்தே இவ்வளவு தூரம் தான் வந்திருக்கிறேன்,,, இந்த தள்ளாத வயதில் அந்த பெரியவர் எப்படி போயிருக்க முடியும்...
மனதிற்குள் பயம் முளை விட்டது....
அங்கேயே நின்று திரும்பி பார்த்தேன்...பெரிய பெரிய மரங்கள் கிளைகளை கை கால்களை  போல் ஆட்டிக் கொண்டிருந்தன.. 
இனி இவ்விடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்க கூடாது பேசாமல் காருக்குள்ளேயே போய் உக்கார்ந்து கொள்ளலாம் என்று வேகமாக காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..
கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தேன்.. உறைந்து போனேன்... காரின் ஹெட் லைட்டுகள் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தன..
பயத்தில் என் இருதயம் துடிக்கும் சத்தம் எனக்கே கேட்டது...கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.. மழை சுத்தமாக நின்றிருந்தது...
அதெப்படி நான் வரும் போது விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்டு காரை லாக் செய்து விட்டுத்தானே வந்தேன்..
பி..பி..பின்.. எப்..எப்படி..?
காரின் அருகில் சென்று பார்க்கலாமா?
மனதிற்குள் நினைத்தாலும் பயத்தால் கால்கள் நகர மறுத்தன..
எச்சிலை விழுங்கிக் கொண்டே மெல்ல மெல்ல முன்னே சென்றேன்... காரின் பானட்டில் கை வைத்ததும் விளக்குகள் அணைந்து விட்டது...
காரின் கதவிடம் வந்தேன்.. அந்த மழைக் குளிரிலும் என் உடல் தெப்பமாய் வியர்த்திருந்தது..
மெல்ல கார் கைப்பிடியை திருகினேன்.. ப்ளக் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது...
லாக் செய்த கதவுகள் எப்படி திறக்கும்? ஒரு வேலை சரியாக லாக் செய்யாமல் விட்டிருப்பேனா ?
மெல்லக் கதவை திறந்தேன்... உள்ளே விளக்கு எரிந்தது... அங்கே...அங்கே... ஒரு உருவம் காரின் பின் சீட்டில் உட்க்கார்ந்திருந்தது ....
இதயம் துடிக்க மறுத்தது.. 
முகம் முழுவதும் அழுகிய நிலையில் அந்த உருவம்  என்னை பார்த்து சிரித்தது...
விழுந்தடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்தேன்.. எவ்வளவு தூரம் ஓடி வந்தேன்... தெரியவில்லை..
அந்த குறுக்கு பாதையில்  இருந்து விலகி செடி கொடிகளுக்கிடையில் ஓடி வந்திருந்தேன்...
தூரத்தில் சின்னதாய் ஒரு வெளிச்சம் தெரிந்தது... எதாவது வீடாக இருந்தால் உதவி கேட்கலாம் என்று வெளிச்சத்தை நோக்கி ஓடினேன்..
கிட்ட வர வரத்தான் அது ஒரு பெரிய பங்களா என்று தெரிந்தது... இருட்டில் பெரியதாக பார்பதற்க்கே பயமாக இருந்தது... அதன் கேட்டில் தான் அந்த சின்ன சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது... 
பங்களாவின் சுவரெங்கும் செடி கொடிகள் படர்ந்திருந்தது...
உள்ளே போகலாமா வேண்டாமா ?
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  கேட்டைத் திறந்தேன்... அந்த கேட் ஒரு நாராசமான ஒலியை எழுப்பியது..  உள்ளே நுழைந்தேன்.. 
பங்களாவை சுற்றிலும் செடிகள் ஆளுயரத்திற்கு வளர்ந்து இருந்தது..  மெல்ல மெல்ல நடந்தேன்... இரண்டடிகள் முன்னே சென்றதும் ஏதோ ஒன்று வெள்ளையாய் நீளமாய் தெரிந்தது..என்ன அது ? அது ஒரு கல்லறை .. அங்கங்கே இடிந்து சிதிலமாய் காட்சியளித்தது... என்  உள்மனது என்னை எச்சரித்தது.. வேண்டம் இனி ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்காதே..
ஆனால் இந்த அடை மழையிலும் இங்கே விளக்கு எரிகிறது என்றால் இங்கே ஆள் இல்லாமலா இருப்பார்கள்.. இறுதியாக ஒரு முறை உள்ளே சென்று பார்த்து விடுவது என்று முடிவெடுத்து உள்ளே சென்றேன்.. 
பங்களாவின் கதவுகள் திறந்துதான் இருந்தது.. குரல் கொடுத்தேன்.. 
உள்ளே உள்ளே யாரவது இருக்கீங்களா ?
ஒரே நிசப்தம்...
மீண்டும் குரல் கொடுத்தேன்..
அதே  நிசப்தம்...
ஆனால் மாடியில் எதோ சத்தம் கேட்க  படிகள் ஏறி மாடிக்கு சென்றேன்... ஐந்தாறு அறைகள் நீளமாக இருந்தன..
பங்களா முழுவதும் வெளிச்சம் இன்றி இருளில் இருந்தது.. இருட்டிலேயே இருந்ததால் கண்கள் இருட்டுக்கு பழகி இருந்தது..அந்தக் கடைசி அறையில் இருந்து எதோ நகர்த்தும் சத்தம் கேட்டது.. அறைக் கதவின் வெளியே நின்று  குரல் கொடுத்தேன் உள்ளே யாராவது இருக்கீங்களா?
சத்தம் நின்று விட்டது...
கதவை திறந்தேன் அறை எந்த பொருள்களும் இன்றி வெறுமையாக இருந்தது.. ஜன்னல் அருகே சென்றேன் ... எல்லா இடமும் வெறுமை.. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது..
வேண்டாம் இங்கிருந்து சென்று விடலாம் என்று திரும்ப முயற்ச்சித்த போது என் முதுகுக்கு பின்னல் என் கழுத்தருகே யாரோ கோவமாய் மூச்சு விடும் சத்தம்....
என் கை கால்கள் உதற ஆரம்பித்தன.. நரம்பு மண்டலங்கள் வெடித்து சிதறி விடும் போல இருந்தது... மெல்ல திரும்பினேன்... அவ்வளவுதான்..
கண் விழித்து பார்த்த போது நான் என் அறையில் என் படுக்கையில் இருந்தேன்.. அப்போது நான் கண்டது எல்லாம் கனவா.....
 

Monday, September 7, 2009

ரெண்டு ரூபா பஸ் டிக்கட்ட ஒன்பது ரூபாய்க்கு வாங்கின கோமாளி

அது யாருன்னு கேக்கறீங்களா .. நான்தாங்க....

நடந்தது என்னனு கேளுங்க .... ஒரு வேலையா பஸ் ஸ்டாண்ட் வரையும் போக வேண்டி  இருந்ததுங்க ....

சரின்னு பஸ் ஏறினேன் ....முதல் படியில தான் கால வெச்சேன் அதுக்குள்ளே பஸ் எடுத்துட்டாங்க ... டிரைவருக்கு என்ன அவசரமோ தெரியல..
எதோ முதல் சீட்ல உக்காந்திருந்த அம்மா கை கொடுத்து தூக்கி விட்டாங்க..... 
எப்படியாவது எதாவது ஒரு கம்பிய புடிச்சு நின்னு பேலன்ஸ் பண்ணிக்கலாம்னு பாத்தா டிரைவர் ரேசுல போற மாதிரி போயிட்டு இருந்தாரு....... விட்டா டிரைவர் மடியில போய் உக்காந்துருப்பேன்..... நல்ல வேளை ஒரு கம்பிய புடிச்சு நின்னுட்டேன்... 
அதுக்குள்ள கண்டக்டரும் வந்து டிக்கெட் டிக்கேட்னு கிட்ட வந்துட்டாரு...

ஒரு கைல கம்பிய புடிச்சுக்கிட்டு இன்னொரு கையாலயும் வாயாலையும் பர்ஸ திறந்து பாத்தேன்.....
இரண்டு நூறு ருபாய் நோட்டும் ஒரு இருபது ருபாய் நோட்டும் இருந்தது... பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போறதுக்கு சார்ஜ் ரெண்டு ரூபா.. 
ஆனா என்கிட்டே ரெண்டு ரூபா சில்லரையா இல்லை....  ஒரே ஒரு ஐந்து ருபாய் காயின் மட்டுமே இருந்தது... அதை எடுத்துக் கொடுத்தேன்..
சில்லரை இல்லையானு கேட்டார்... இல்லன்னா என்றேன்.... காசை வாங்கிகிட்டு டிக்கெட்டை கொடுத்தார்...

அவருக்கு என்ன கோவமோ தெரியல.. எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்..
என்னிடம் டிக்கெட்டை கையில் திணித்து கொண்டே அருகில் இருந்தவரை பார்த்து நீங்க எல்லாம் எதுக்கையா சில்லரை இல்லாம பஸ்சுல வரீங்க... கழுத்தருக்கருக்கே வருவீங்களா என்று திட்டிக் கொண்டிருந்தார்..

எனக்கு டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி சில்லரையை கொடுக்காமல் அவர் பாட்டுக்கு பின்னாடி சென்று விட்டார்..

சரி அவரிடம் சில்லரை இல்லாமல் இருக்கும் திரும்பி வரும் போது தருவார் என்று எனக்கு நானே குருட்டு சமாதானம் சொல்லிக் கொண்டேன்...

அதற்கு பின் இரண்டு மூன்று முறை முன்னே வந்தார் அடுத்தடுத்த நிறுத்தத்தில் ஏறியவருக்கெல்லாம் டிக்கெட் கொடுத்து விட்டு சென்றார்..

அண்ணா மீதி சில்லரை என்றேன்.. அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் சென்று விட்டார்..
நான்கைந்து  முறை அவரிடம் கேட்டு விட்டேன் அதை அவர் காதில் போட்டு கொண்டதாகவே தெரியவில்லை....
பேருந்திற்குள்ளும் கூட்டம் அதிகமாயிற்று ..... மிக்ஸிக்குள் அரைக்க போட்ட தேங்காய் மாதிரி தலை சுற்றி விட்டது..  பிழிந்தெடுத்து விட்டார்கள்..

அண்ணா மீதி சில்லரை .......என்று இழுத்தேன் ...
எல்லோரும் என்னையே பார்ப்பதாக எனக்கு தோன்றியது... ச்சை.. ஒரு மூன்று ரூபாவுக்கு வேண்டி நம்ம மானம் போகணுமா என்று நினைத்து பஸ் ஸ்டாண்டிற்கு  சென்ற பிறகு எல்லாரும் இறங்கியவுடன் கண்டக்டரிடம் தனியாக கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்..

ஸ்டாண்டும் வந்தது.. எல்லாரும் இறங்கிய பின் நான் கடைசியாக இறங்கினேன் ...

எனக்கு முன்னாலே இன்னொரு பெண் அந்த கண்டக்டரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்..

நானும் என் பங்குக்கு சேர்ந்து கொண்டேன்.. அண்ணா எனக்கு நீங்க சில்லரை தரணும்.. அவர் என்னை பார்த்து முறைத்தார்... 
அந்த இடத்தில் கொஞ்சம் சத்தம் அதிகமாகவே இரண்டு மூன்று பேர் எங்களை சுற்றி  கூடி விட்டனர் ... எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது ... என்னடா இது பேசாமல் மீதியை வாங்காமல் போய் விடலாமா என்று திரும்பிய போது என் தோழி வந்தாள்....
இரண்டு ருபாய் சில்லரையாய் இல்லாததால் தானே இந்த பிரச்சனை .... பேசாமல் இரண்டு ரூபாயை கொடுத்து விட்டு நான் கொடுத்த அந்த ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து

அவளிடம் அவசரமாக ஒரு ரெண்டு ருபாய் இருந்தா தா என்று வாங்கி அதை அந்த கண்டக்டரிடம் கொடுத்து விட்டு என்னுடைய ஐந்து ரூபாயை கேட்டேன்...

அந்த இரண்டு ரூபாயை சண்டை போட்ட பெண்மணியிடம் கொடுத்து விட்டு இந்தாம்மா உன் கணக்கு சரியாய் போயிடுச்சா என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்..

நான் அவரிடம் கேட்டேன் ....
அண்ணா நீங்க எனக்கு சில்லரை தரணும் ....
எவ்வளவு?...
ஐந்து ருபாய்..

எதுக்கு...?

நான் உங்ககிட்ட ஏழு ருபாய் தந்தேன் நீங்க எனக்கு ஐந்து ருபாய் மீதம் தரணும்...

அதற்குள் அவரை சுற்றி இரண்டு மூன்று கண்டக்டர்கள் சூழ்ந்து கொண்டார்கள்..

எத்தன ரூபா டிக்கெட் வாங்கினே ?

இரண்டு ரூபா டிக்கெட்..

அதுக்கு எதுக்கு ஏழு ருபாய் கொடுத்தே?

கரகாட்டக்காரன் படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் பழக் காமெடியை போல் ஆகி விட்டது என் நிலைமை .....
நடந்ததை மறுபடியும் விளக்கினேன்... அவர் என்னிடம் ஐந்து ருபாய் வாங்கவே இல்லை என்று சாதித்தார்...

எனக்கு சாதகமா பதில் சொல்ல என்னுடன் பஸ்சில் இருந்தவர்கள் யாரும் இல்லை ... நான் அவரிடம் சொன்னேன்...

 அண்ணா நான் எதுக்குன்னா உங்கள ஏமாத்தனும்... பாருங்க  என்கிட்டே எத்தன ரூபா இருக்குன்னு என்று என் பர்சை திறந்து காண்பித்தேன் ...

அவரும் அவர் பங்குக்கு அவர் கண்டக்டர் பர்சை திறந்து காண்பித்து  என்னிடமும் இத்தனை சில்லரை இருக்கும் போது நான் மட்டும் உன்னை ஏன் ஏமாத்த  போறேன் என்று வாதாடினார்..

அவருக்கு சப்போர்ட்டாக மத்த கண்டக்டர்களும் சேர்ந்து கொண்டனர்.. அவர்கள் குரல் ஓங்கி நிற்கவே நான் இதற்க்கு மேல் சத்தம் போட வேண்டம் என்று ஒதுங்கி வந்து விட்டேன்...
என்னை சுற்றி அனைவரும் ஆண்கள்... அவர்களோடு சண்டை போடவும் உண்மையாக  கொஞ்சம் பயமாகவும்  இருந்தது..  
என் தோழியோடு வீடு வந்து சேர்ந்தேன்...
கடையில் சில்லரையை மாற்றி என் தோழியிடம் வாங்கிய இரண்டு ரூபாயை கொடுத்து விட்டேன்.. அவள் வேண்டாம் என்றுதான் சொன்னாள்... 
இரண்டு ருபாய் என்றாலும் அதற்கும் மதிப்பு உண்டுதானே  ... அதற்காகத்தானே  அந்த கண்டக்டர் என்னை ஏமாற்றினார்...