Saturday, January 29, 2011

ஆண்களின் மன நிலை என்று மாறப் போகிறது??????

மனித மனங்களின் வக்கிரங்களை நினைத்து பார்க்கவே கேவலமாக இருக்கிறது ... இன்று மாலை நான் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது நான் சந்தித்த ஒரு நபரின் உள்ளக் குமுரலையே இங்கே பதிவாக்கி உள்ளேன் .....

பார்க்கவே அவ்வளவு வசீகரம் அந்த முகத்தில்....... ஆனால் கண்ணில் மட்டும் அவ்வளவும் சோகம் ..... அந்த பெண்ணின் பெயர் ரேகா ( ஆனால் சமூகத்தில் விலை மாது  )..

 அடித்து பிடித்து அந்த பேருந்தில் ஏறினேன்... மூச்சடைப்பு ஏற்படும் அளவிற்கு கூட்டம்... சமாளித்து உள்ளே சென்றேன்.. அவ்வளவு கூட்டத்திலும் வசீகரித்தது அவள் அழகு ... ஆண்களுக்கும்  பெண்களுக்கும்  இடையில் பேருந்தின் நடுவே  நின்றிருந்தேன் ... எனதருகில் ரேகாவும்..

ஓட்டுனர் பிரேக் போடும் போதெல்லாம் எனதருகில் நின்றிருந்த அந்த மூன்று ஆண்களும் அவளின் மேலே போய் தாறுமாறாக  மோதினர் .. பிரேக் போடாத சமயங்களிலும்  கூட ...

அவர்களின் பார்வைகள் அவளின் ஜாக்கெட்டுகுள்ளேயே இருந்தன ...
ரேகாவும் அவர்களின் பார்வைகளை கண்டு கூச்சபட்டதாகவே தெரியவில்லை ..இரண்டு நிறுத்தங்களுக்கு  பிறகு எங்கள் இருவருக்கும் ஒரு இருக்கை கிடைத்தது அமர்வதற்கு.. அமர்ந்ததும் அவளிடம் வினவினேன்  இயல்பான எரிச்சலுடன் ஏன் இந்த ஆண்கள் இப்படி செய்கிறார்கள் என்று ...

அதற்கு அவள் அளித்த பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது ...
"" அவர்கள் தான் எனக்கு சோறு போடும் புண்ணியவான்கள் அவங்களை திட்டாதே"" என்றாள்...
நான் அவள் சொல்வது புரியாமல் அவளையே பார்த்தேன் ... என்னை பார்த்து கண்ணை சிமிட்டினாள்.... நான் புரிந்து கொண்டேன் ...

அதன் பின் அவளிடம் பேச்சு கொடுக்காமல் அமைதியாகவே வந்தேன் ... சிறிது நேரம் கழித்து அவளாகவே  அந்த அமைதியைக் கலைத்தாள்..  அதற்கு பின் எங்களுக்குள் நடந்த உரையாடல்
"அம்முவுக்கு ஒரே ஜுரம், டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும் ... ஒரு டிக்கெட் கூட மாட்ட  மாட்டிங்குது "
நான் பதில் ஏதும் பேசவில்லை ......
"அம்மு என் பொண்ணு எட்டு மாசம் ஆகுது .. என்னாலதான் என் பாப்பாவுக்கு ஜுரம்"
"நேத்தே  அம்முக்கு கொஞ்சம் ஒடம்பு சூடு இருந்துச்சு.. ஆனா எங்க கவனிக்க விட்டான் அந்த படு பாவி .."

நான் பேசாவிட்டாலும் அவளாகவே எல்லாவற்றையும் கூறினாள்..என்னிடம் பேசி கொண்டிருக்கும் போதே கண்டக்டரும் வந்து தான் பங்குக்கு கொஞ்ச நேரம் அவளிடம் வழிந்து விட்டு சென்றார் ..
 

"நேத்து அம்முவ கட்டுலுக்கு அடியில படுக்க வெச்சுட்டேன் துணி கூட விரிக்காம.. இந்த குளுர்ல தர வேற ஐசு மாறி இருந்துச்சு .. ஜுரம் அதிகம் ஆய்டுச்சு..."

கட்டிலுக்கு அடியிலயா ??...

"எப்போதுமே கஸ்டமர் வரும் போது அம்முவ காயத்திரி கிட்டயோ ராணி கிட்டயோ ( அதே தொழிலில்  இருப்பவர்கள்..) ஒரு மணி நேரம் பாத்துகோனு சொல்லுவேன்.. ஆனா நேத்து அவங்களுக்கும் கஸ்டமருங்க வந்துட்டாங்க .. என்ன பண்றது .. 
அம்முவ கட்டுலுக்கு அடியில படுக்க வெக்க வேண்டியதா போய்டுச்சு ... 
எல்லாம் என் நேரம் பாதியில ஜுரத்துல பாப்பா அழவும் அவன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு  ஓடிட்டான்.. என் பொழப்பே போச்சு ... 
ஓனர் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டான்... கையில இருந்த காசையும் வாங்கிக்கிட்டான் .... "

இடையில் அவளின் போன் ஷஷ்டிய நோக்க  சரவண பவ என பாடி அழைத்தது ... எடுத்து பவ்யமாய் காதில் வைத்து
"அண்ணா இன்னும் ஒன்னும் தேரல ... ஒரு இரு நூறு ரூபா குடுண்ணா.. பாப்பாவ டாக்டர் கிட்ட காட்டிட்டு வந்துடறேன் ... " மறுமுனையில் என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை ..


போனை அணைத்த அவள் திரும்பவும் தொடர்ந்தாள். ஆனால் இப்போது கண்களில் நீர் கோர்த்திருந்ததது.

"கொஞ்சம் கவனிக்காம விட்டு இது பொறந்துடுச்சு. என்ன மாதிரி இதுவும் ஆயிட கூடாது.. என்ன பெத்தவ பண்ண தப்ப நானும் செய்ய கூடாதுன்னு பாக்கறேன். 
நான் எல்லாம் ஒரு நைட்டு போனா ஆயிரக்கணக்கா
கொண்டு வருவேன் ஆனா இந்த பாவி எல்லாத்தையும் புடிங்கிக்குவான் அவன் கண்ணுக்கு தெரியாம ஒளிச்சுவெச்சாதான் காசு பாக்க முடியும் என் புள்ளைய வளர்த்த முடியும்" என்று கண்களில் கண்ணீருடன் பேருந்தின் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்றாள்..

இறங்கும் போதும் அதே உரசல்கள், கண்டக்டரின்

வழிசல்...  

கட்டிலுக்கடியில் பெற்ற குழந்தையை விட்டு விட்டு கட்டிலுக்கு மேலே தன் உடம்பை விற்று சம்பாரிக்கும் அந்த தாயின் நிலையை நினைத்தால் ஒரு புறம் கோபம் வந்தாலும் இன்னொரு புறம் பரிதாபமாகவும் இருந்தது ...  

அவள் உடையில் ஆபாசம் இல்லை .. பார்க்கும் அந்த ஆண்களின் கண்களில் மட்டுமே ஆபாசம் இருக்கிறது.. மனம் நிறைய அழுக்கும் வக்கிரங்களையும் வைத்துக் கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு  நானும் ஆண் மகன் என்று சொல்லி திரிய வெட்க பட வேண்டும் .. கார்த்திகை மாதங்களில் வெளியில் திரியும் ஐந்தறிவு கொண்ட அந்த நான்கு கால் ஜீவன்களுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்....
தான் எதிரில் இருக்கும் பெண்ணிற்கும் உணர்வுகள் உண்டு என்பதை எப்பொழுது புரிந்து கொள்ள போகிறான் .. 

பாரத மாதா தொடங்கி எல்லா பெண்ணிற்கும் மதிப்பு பெயரளவில் மட்டுமே ..ஊரில் உள்ள கடவுள்களில் முக்காலும் பெண் கடவுள்களே  இத்தனைக்கும் மேலே ஒவ்வொரு வீட்டிலும் அம்மா என்ற ஒரு கடவுளை வைத்துக் கொண்டு பெண்ணை வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த ஆண்களின் மன நிலை என்று மாறப் போகிறது??????